ட்ரம்பின் முன்னாள் மருமகளோடு காதல்.. உறுதிப்படுத்திய கோல்ஃப் சாம்பியன்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் மருமகளை காதலித்து வருவதாக பிரபல கால்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் கூறியுள்ளார். வனிசா ட்ரம்ப்வுடன் தான் இருக்கும் இரு புகைப்படங்களையும் தன் எக்ஸ் தள பக்கத்தில் டைகர் உட்ஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "காதல் காற்றில் தவழ்கின்றது. நீங்கள் என் பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நாங்கள் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அதில் தெரிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்களில் கடந்த 2 வாரங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில், அதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப்பின் மகன் ஜான் ட்ரம்ப்பை திருமணம் புரிந்திருந்த வனிசா, 2005 முதல் 2018 வரை அவருடன் குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். டைகர் உட்சும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
உட்ஸ் முன்பு ஸ்வீடிஷ் மாடல் எலின் நோர்டெக்ரனை மணந்தார். ஆனால் விளையாட்டு உலகையே உலுக்கிய மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஊழலில் உட்ஸ் சிக்கிய சிறிது நேரத்திலேயே, 2010இல் அவர்கள் இருவரும் பிரிந்தனர். அப்போதிருந்து, 15 முறை பிரபல சாம்பியனான இவர், அமெரிக்க பனிச்சறுக்கு ஜாம்பவான் லிண்ட்சே வோன் மற்றும் எரிகா ஹெர்மன் உள்ளிட்ட பிற உயர்மட்டவர்களிடமும் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. டைகர் உட்ஸ் மற்றும் வனிசா ட்ரம்ப்பின் பிள்ளைகள் ஒரே பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே பள்ளியில் படிக்கும் வனிசாவின் 17 வயது குழந்தையான காய், அடுத்த ஆண்டு மியாமி பல்கலைக்கழகத்தில் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்க உள்ளார்.