இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO

இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO
இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO

உலகளாவிய பொருளாதார மந்தநிலை விரைவில் வரப்போவதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் நகோசி ஒகோஞ்சோ இவேலா ( Ngozi Okonjo-Iweala) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளவில் நிகழும் பல மோதல் நெருக்கடிகளால் உலக நாடுகள் அனைத்தும் ஓர் உலகளாவிய பொருளாதார மந்த நிலையை நோக்கி நகர்வதாகவும், தங்கள் வளர்ச்சியை புதுப்பிக்க உலக நாடுகளுக்கு தீவிரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) தலைவர் நகோசி ஒகோஞ்சோ இவேலா ( Ngozi Okonjo-Iweala) அழைப்பு விடுத்துள்ளார்.

“உக்ரைனில் ரஷ்யாவின் போர், காலநிலை நெருக்கடி, உணவு விலை மற்றும் எரிசக்தி மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு உலக மந்தநிலைக்கான நிலைமைகளை உருவாக்குகிறது. அதன் விளிம்பிற்கு நாம் தற்போது வந்திருக்கிறோம். அதே நேரத்தில் நாம் மீட்சியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

காலநிலை, உணவு விலை, பாதுகாப்பு எனப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் பல நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும். எனவே அந்த நாடுகளால் வழக்கம்போல வணிகம் செய்ய இயலாது. அந்நாடுகளின் மத்திய வங்கிகள் இறுக்கமான போக்கை கையாள்கின்றன. அவர்களுக்கு அதிக வாய்ப்புகளும் இல்லை என்பதால் வட்டிவிகிதங்களை உயர்த்துவது போன்ற இறுக்கமான முடிவுகளை எடுக்கின்றன.

ஆனால் இந்த வட்டிவிகித உயர்வு அந்நாடுகளின் கடன் சுமைகளை கடுமையாக பாதிக்கிறது. இதன்மூலம் அவர்களது பணவீக்கம் குறையாமல் மூலதனமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் அந்தந்த நாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தான். பணவீக்கம் வலுவான தேவையால் ஏற்படுகிறதா அல்லது பொருட்களை பகிர்ந்தளிக்கும் பக்கத்திலுள்ள கட்டமைப்பு சிக்கல்களுடன் தொடர்புடையதா என்பதை மத்திய வங்கிகள் தீர்மானிக்க வேண்டியது அவசியம். உணவுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது, அதைத் தொடர்ந்து ஆற்றலை அணுகுவது என்பதுதான் எனது முக்கிய கவலை” என்று ஒகோன்ஜோ-இவேலா கூறினார்.

முன்னதாக சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாக உலக வங்கி தனது கணிப்பை வெளியிட்டது. தற்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாக உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் வெளியானது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. இதனால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என அந்நாடுகள் நம்புகின்றன.

ஆனால், வட்டி விகிதங்களை உயர்த்துவதால், முதலீடுகள் குறைவதோடு வேலைவாய்ப்பின்மையும் உருவாக வாய்ப்புள்ளதால் பொருளாதார வளர்ச்சி குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்துவது, கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன் இருந்த பொருளாதார நிலைக்கு செல்ல உதவிகரமாக இருக்காது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனை தடுக்க சர்வதேச அளவில் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விநியோகச் சங்கிலி தடைபடாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் என உலக வங்கி ஆலோசனை கூறியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் அனைத்தும் ஒரு பொருளாதார மந்த நிலையை நகர்ந்து வருவதாக உலக வர்த்தக அமைப்பும், உலக வங்கியும் அடுத்தடுத்து எச்சரிகை விடுத்துள்ளன. இரு அமைப்புகளும் பண வீக்கத்தையும், அந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகித உயர்வையும் மந்த நிலைக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக பட்டியலிட்டுள்ளன. அவற்றில் முதல் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் “பண வீக்கம்” பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com