சிக்கலில் தத்தளிக்கும் உலக பொருளாதாரம்.. கடனால் ஏழை நாடுகளில் வெடிக்கும் போராட்டங்கள்

சிக்கலில் தத்தளிக்கும் உலக பொருளாதாரம்.. கடனால் ஏழை நாடுகளில் வெடிக்கும் போராட்டங்கள்
சிக்கலில் தத்தளிக்கும் உலக பொருளாதாரம்.. கடனால் ஏழை நாடுகளில் வெடிக்கும் போராட்டங்கள்

இலங்கை, லெபனான், சாம்பியா (Zambia), சூரிநாம் (Suriname), ஆப்கானிஸ்தான், சூடான், எத்தியோப்பியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார சிக்கல்களால் தத்தளித்து வருகின்றன.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலை!

கடும் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை ஆகியவற்றை எதிர்த்து இந்த நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல தென் அமெரிக்க நாடுகளிலும் இதேபோன்ற சூழல் நிலவுகிறது. பிற நாடுகளிடம் வாங்கிய கடனை இந்த நாடுகள் திருப்பி கொடுக்க இயலாத சூழலில், மேற்கொண்டு இறக்குமதிக்காக கடன் வாங்குவது இந்த நாடுகளுக்கு சவாலாக உள்ளது.

உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு! - வெடிக்கும் போராட்டங்கள்

துருக்கி போன்ற நாடுகளிலும் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல தென் அமெரிக்க நாடுகள் உணவு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போராட்டங்களை சந்தித்து வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உணவுப்பொருள் விலை அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் தாக்கம் மற்றும் 2020, 2021 ஆகிய வருடங்களில் கோவிட் பாதிப்பு ஆகியவை காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதாரம் மற்றும் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

டாலருக்கு நிகரான கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவு!

ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இந்த நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகராக இந்த நாடுகளின் கரன்சிகள் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன. பொருளாதார சிக்கல்கள் காரணமாக புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் அதிகரித்த பணவீக்கம்!

துருக்கி போன்ற நாடுகளிலே பணவீக்கம் 40% என கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாட்டில் வரலாறு காணாத 11% பணவீக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பணவீக்கம் அதிகம் இருந்தாலும், டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதால் இதுவரை அந்த நாடு சூழலை சமாளித்து வருகிறது. இருந்த போதிலும் அமெரிக்காவிலே பொருளாதார மந்த நிலையால், வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. மெட்டா மற்றும் அமேசான் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கைக்கொடுக்கும் இந்திய, சீன பொருளாதாரம்

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி தற்போது ஓரளவுக்காவது கைக்கொடுத்து வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் அதிக அளவில் சரியாமல் தாங்கி வருகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பல தென் அமெரிக்க நாடுகள் தற்போது மிகவும் சிக்கலான பொருளாதார தடுமாற்றத்தில் உள்ளன. அதேபோலவே வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற பல ஆசிய நாடுகளிலும் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. ஐ.நா., உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளன.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com