"உக்ரைனுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை" - ஜெர்மன் பிரதமர்
உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட ஸ்கோல்ஸ், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது ரஷ்யா போர், வடகொரியா ராணுவ வருகை, அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்கோல்ஸ், ”உக்ரைனுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றும், உக்ரைன் மக்களுடன் எப்போதும் ஜெர்மனி துணை நிற்கும்” எனவும் பதிவிட்டுள்ளார். அதேசமயம், ”அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமே போருக்கு தீர்வு காண முடியும்” என்றும் ஸ்கோல்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், போருக்குத் தேவையான உதவிகளையும் உக்ரைன் அரசுக்கு ஜெர்மனி செய்து வருகிறது. நடப்பாண்டு நிலவரப்படி, ஜெர்மனி கிட்டத்தட்ட 34 பில்லியன் யூரோக்களை பல்வேறு வகையான உதவிகளில் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இதில் நேரடி நிதி உதவி, கடன்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான பங்களிப்புகள் ஆகியவை அடங்கும்.
மேலும், ஜெர்மன் அரசு, உக்ரைனில் வணிகரீதியாகவும் உதவி வருகிறது. உக்ரைனில் உள்ள 43 சதவீத ஜெர்மன் நிறுவனங்கள் ஆற்றல், மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் போன்ற துறைகளில் புதிய முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளன. ஜெர்மனியுடனான உக்ரைனின் வர்த்தக அளவு ரஷ்யாவுடனான ஜெர்மனியின் வர்த்தகத்தைவிட அதிகமாக உள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாவும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.