அடேங்கப்பா..! 120 நாள்கள் கடல் நீருக்கடியில் வாழ்ந்து புதிய சாதனை படைத்த ஜெர்மன் வீரர்!
ஜெர்மனியைச் சேர்ந்தவர் ருடிகர் கோச் (59). விண்வெளிப் பொறியாளரான இவர், கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட 320 சதுரடி அளவிலான நீர் புகாத தங்குமிடத்தில் வாழ்ந்து கின்னஸில் உலக சாதனை படைத்துள்ளார். பனாமா கடல்பகுதில் 36 அடி ஆழத்தில் உருவாக்கப்பட்ட அந்த தங்குமிடத்தைவிட்டு வெளியே வராமல் தொடர்ந்து 120 நாள்கள் அவர் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜன.24) கடல் நீருக்கடியில் 120 நாள்கள் கழித்த அவர், கின்னஸ் உலக சாதனையாளர் சுசனா ரெய்ஸ் முன்னிலையில் வெளியே வந்தார். இதையடுத்து, இதற்கு முன்னர் 100 நாள்கள் புளோரிடா குளத்தில் நீருக்கடியில் இருந்த அமெரிக்காவின் ஜோசப் டிடூரியின் சாதனையை இவர் முறியடித்துவிட்டதாக சுசனா ரெய்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது இந்தச் சாதனைக்காக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தங்குமிடம், ஒரு மிகப்பெரிய குழாயின் வழியாக கடலுக்கு வெளியே இருக்கும் மற்றொரு அறையோடு இணைக்கும்படி உருவாக்கப்பட்டது. அந்தக் குழாயினுள் சுழலும் வடிவிலான படிகள் அந்த தங்குமிடத்தினுள் சென்றடையும். அந்த தங்குமிடம் முழுவதும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறும் வசதி படைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு படுக்கை, கழிப்பறை, தொலைக்காட்சி, இணைய வசதியுடன் கூடிய கணினி மற்றும் உடற்பயிற்சி வாகனம் உள்ளிட்டவை அதனுள் இடம்பெற்றிருந்தன.
அந்தப் படிகளின் வழியாக நாள்தோறும் அவருக்கான உணவுகள் அனுப்பப்பட்டதுடன், அவரைக் காண வருவோர் அவ்வழியாக உள்ளே செல்லவும் அதில் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரமும் அவர் செய்யும் செயல்கள் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டன.