காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 64 விழுக்காட்டினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது. இந்த
தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு என ஹமாஸ் கூறியுள்ள நிலையில் அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் தாக்குதலுக்கு முன் கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதற்காக அந்த மருத்துவமனை வளாகத்தையே விளையாட்டு திடலாக பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருந்தது நமக்கு தெரிகிறது.
ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி ஒருநாள் கூட தாண்டவில்லை. காஸா நகரிலேயே மிகப் பெரிய மருத்துவமனையான அல் அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதலை எதிர்பாராத நோயாளிகள் பலர் வெடிகுண்டின் வெப்பத்திலேயே கருகி சாம்பலானதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஐநாவின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் 80 விழுக்காடு கட்டடங்கள் முழுவதுமாக சிதைந்துள்ளன. நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட போது மருத்துவமனை வளாகத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்ததாக கூறப்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அல் அஹ்லி அரபு மருத்துவமனை 1882ம் ஆண்டு ஜெருசலேமில் உள்ள ஆங்கிலோ தேவாலயம் மூலமாக கட்டப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை என கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தாக்குதலில்தான் மருத்துவமனை தகர்ந்ததாக கூறியுள்ளது.
மேலும் “பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிதான் இந்த தாக்குதலுக்கு காரணம்” எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் , ஹமாஸ்
அமைப்பை சேர்ந்த ஒருவர் பேசுவது போன்ற ஆடியோவை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவம் பாலசீன மக்களின் ரத்தத்தை குடித்து வருவதாக ஹமாஸ் அமைப்பும், இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும் குற்றம்சாட்டியுள்ளன. அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய அவலம் இது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மருத்துவமனை தாக்குதலில்மட்டும், பல நோயாளிகள் - மருத்துவர்கள் - செவிலியர்கள் - ஐநாவின் ஊழியர்கள் - உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவும் “போரில் ராணுவ வீரர்கள் இறக்க வேண்டும்; அப்பாவி மக்கள் இறக்கக்கூடாது” என இஸ்ரேல் ராணுவத்தை சாடியுள்ளதோடு மட்டுமின்றி இது தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.