பட்டினியில் வாடும் காசா குழந்தைகள்
பட்டினியில் வாடும் காசா குழந்தைகள்web

மிகப்பெரிய இனப்படுகொலை.. பட்டினியில் வாடும் ’காசா’ மக்கள்.. இரக்கமின்றி கொல்லும் இஸ்ரேல்!

காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில் மறுபுறும் அவர்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என தத்தளிக்கும் காசா மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி வருகிறது.
Published on

உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என சர்வ நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டு, இன்னொரு விதமான தாக்குதலும் தொடுக்கப்பட்டுள்ளது.

செம்பிறை சங்கம், ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர்.

மிகப்பெரிய இனப்படுகொலையை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது உலகம்!

பசியாற உணவு தேடி அலையும் நிலையில் இஸ்ரேலிய ஏவுகணைகளும் பாய்ந்து வருவதால் மரண பயத்துடன் நிலவறைகளில் பதுங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியும் சிலர் இறந்துவிட்டனர். குண்டு வீச்சில் மகனை பறிகொடுத்த ஒரு தாயின் கதறல் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

படுகாயமடைந்துள்ளவர்கள் குவிவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மருத்துவமனைகள் இடிந்துவிட்ட நிலையில் இருக்கும் சில மருத்துவமனைகளும் சிகிச்சைக்கான மருந்துகள் இல்லாத நிலையில் தடுமாறி வருகின்றன.

3 மாதங்களுக்கு பிறகு அண்மையில் சில லாரி உதவிப்பொருட்களை மட்டும் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. காசா மக்களுக்கு வெள்ளம் போல் உதவி தேவைப்படும் நிலையில் தங்களால் ஸ்பூன் அளவுக்குத்தான் தர முடிவதாக வேதனை தெரிவித்துள்ளார், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் தன் கண் முன்னே ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை மவுனமாக பார்த்துக்கொண்டிருப்பதாக வேதனையும் வெறுப்பும் கொப்பளிக்க ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார், ஸ்லோவேனிய அதிபர் நடாசா பிர்க் முசார். இவரது ஆதங்கத்திற்கு பதில் தரப்போவது யார் என்பதுதான் உலகத்தின் முன் தற்போதுள்ள கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com