அல்ஜீரியாவின் தீர்மானம் நிராகரிப்பு; திடீரென காஸா போர் நிறுத்தத்திற்கு ஆதரவு காட்டும் அமெரிக்கா!

இஸ்ரேல் - காஸா இடையே நடைபெறும் போர் விவகாரத்தில், அமெரிக்கா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடன்
ஜோ பைடன்ட்விட்டர்

காஸா போர்: கெடு விதித்துள்ள இஸ்ரேல்:

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, வடக்கு காஸாவிற்குள் தாக்குதல் நடத்தி முன்னேறிய இஸ்ரேல் ராணுவம் அங்கு முக்கியப் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மேலும் தெற்கு காஸாவிலும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

முற்றிலும் காஸாவை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் தெற்குப் பகுதி தவிர எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. தற்போது இங்கும் இஸ்ரேல் ராணுவம், தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருப்பது, அங்கு புகலிடமாய் வந்து தங்கிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து காஸாவின் பல பகுதிகளில் வந்து ராஃபாவில் தஞ்சமடைந்திருக்கும் பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மிகப் பெரிய மனிதப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐநாவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. ஆயினும், ’தங்கள் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் வரும் ரமலான் மாதத் தொடக்கத்துக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும்; இல்லையேல் அந்தப் பகுதியிலும் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும்’ என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.

இஸ்ரேல் - காஸா போர்: நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா!

இந்தச் சூழலில் காஸா விவகாரத்தில் அமெரிக்கா திடீரென தன் நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது. அதாவது, காஸா தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களில் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது. ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காஸாவில் இஸ்ரேல் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டுவதுடன், ’அங்கு சண்டை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்’ எனவும் வலியுறுத்தி வருவகிறார். தவிர, அந்தப் பகுதியில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

’காஸாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ராஃபா நகரில் தரை வழித் தாக்குதல் கூடாது’ எனவும் வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தயார் செய்துவருகிறது. இதற்கான தீர்மான வரைவில், பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த காஸாவின் ராஃபாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீட்டியுள்ள திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவின் தீர்மானத்தையும் வீட்டோவால் நிராகரித்த அமெரிக்கா

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வந்தாலும், அந்தப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள உதவியாக அங்கு சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அல்ஜீரியா கடந்த 20ஆம் தேதி கொண்டுவந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. வாக்கெடுப்பை பிரிட்டன் புறக்கணித்தது. இதன்மூலம், காஸாவில் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஏறத்தாழ அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இருந்தாலும், அமெரிக்காவின் வீட்டோவால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படமுடியாமல் போனது. இந்தத் தீர்மானத்தையும் சேர்த்து, காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இதுவரை கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி: 

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரேசில் கொண்டுவந்த தீர்மானமும் அமெரிக்காவின் சிறப்பு வீட்டோவால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக, காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பதும் 15 நாடுகளின் உறுப்பினர்கள் கொண்ட குழுவில், 9 நாடுகள் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி

காஸாவில் பொதுமக்களின் அதீத உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தவும் தொடர் முற்றுகையால் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய மற்றும் நிவாரணப் பொருள்களை அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவும் அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற 4 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

ஐ.நா. சபையும்... வீட்டோ அதிகாரமும் ஒரு பார்வை

ஐ.நா சபையில் அதிகாரம் பொருந்திய துணை அமைப்புகளில் மிகவும் முக்கியமானது, பாதுகாப்பு கவுன்சில். சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்வதுதான் இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் வேலை. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த முடிவையும் உலக நாடுகள் அனைத்தும் கட்டாயம் மதிக்க வேண்டும். இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு.

வீட்டோ அதிகாரத்தில் ரஷ்யாவைப் பழிவாங்கிய அமெரிக்கா?

பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். அதேசமயத்தில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்த ஐந்து நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து, வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு. ஐந்து பேரில் யார் ஒருவர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலும், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்துவிடும். மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தனக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே இந்த வீட்டோ அதிகாரம். இதைத்தான் தற்போது அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, ரஷ்யா உக்ரைன் போரின் இதைப் பயன்படுத்தியதால் அமெரிக்கா தற்போது இதைப் பயன்படுத்தி ரஷ்யாவைப் பழிவாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றும் ஒரு திசையிலும், ரஷ்யாவும் சீனாவும் இன்னொரு திசையிலும் எப்போதும் இருக்கின்றன. இதனால் பல முக்கிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதே கிடையாது. மேலும் இந்த வீட்டோ அதிகாரத்தை அதிகமுறை பயன்படுத்திய நாடுகளில் ரஷ்யா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

உக்ரைன் போரில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா

கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், (தற்போதும் நடைபெற்று வருகிறது) ‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ஆனால், ரஷ்யா தன் ஒற்றை அதிகாரவாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது.

ஜோ பைடன்
இஸ்ரேல்-காஸா போர்: மனிதாபிமான இடைநிறுத்த தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த அமெரிக்கா!

அமெரிக்கா இஸ்ரேலைச் சமாதானப்படுத்துவது ஏன்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க உள்நாட்டிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஜனநாயகக் கட்சியின் சில முக்கிய தாராளவாத உறுப்பினர்கள், அமெரிக்காவின் நிபந்தனைகளை மீறி சில அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது குறித்த மனித உரிமை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில், 33% பதிவு செய்யப்பட்ட அமெரிக்க வாக்காளர்கள் மட்டுமே இஸ்ரேல்-பாலத்தீன மோதலை அதிபர் இப்படிக் கையாள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 39% முதல் 44% வரையான பொதுமக்கள் இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

joe biden
joe bidenpt desk

மேலும், பைடனின் சொந்த நிர்வாகத்தில் இருந்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டு வருகின்றன. முக்கியமாக, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபரின் தேர்தல் கருத்துக் கணிப்புகளும் இஸ்ரேல் விவாகாரத்தால் அவருக்குப் பின்னடைவைத் தரலாம் எனக் கருதப்படுகிறது. இதைவைத்தே, இஸ்ரேலின் தாக்குதலை குறைக்கும் அடுத்தகட்ட முயற்சியில் ஜோ பைடன் இறங்கியிருப்பதாக அரசியலாளர்கள் கருதுகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com