இனவெறிக்கு எதிரான கலவரத்தில் சேதமாகிய காந்தியின் சிலை ! - மன்னிப்பு கோரிய அமெரிக்கா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான கலவரத்தின் போது வாஷிங்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் வெளியே இருக்கும் மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்காக அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
கோபமடைந்த மக்கள் கடந்த ஒரு வாரக் காலமாக நாடு முழுவதும் போராடுகிறார்கள். இது சாதாரண போராட்டம் அல்ல, 1968-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு எப்படிக் கொந்தளித்ததோ, அந்த அளவுக்கு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தி சிலை கலவரத்தில் சேதமாகியது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "காந்தியின் உருவச்சிலை சேதமடைந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். ஜார்ஜ் பிளாய்டின் கொடூர மரணத்துக்குப் பின்பு அமெரிக்கா முழுவதும் வன்முறையும், சேதமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நியாயமற்ற செயலுக்கு எதிராக எப்போதும் நாங்கள் நிற்போம், இதிலிருந்து விரைவில் மீள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.