‘அல்- அக்சா ஃப்ளட்’ : இஸ்ரேல் - ஹமாஸ் போர்க் காரணமும், பெயர்க் காரணமும்..

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையேயான தற்போதைய போருக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அல்- அக்சா மசூதி. இந்த போருக்கு ஹமாஸ் படையினர் வைத்துள்ள பெயரும் அல்- அக்சா ஃப்ளட்... ஏன் இந்த போர்.. எதற்காக இந்த பெயர்.. விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
israel - hamas war
israel - hamas warpt web

உலகை ஒரு சில நாட்களில் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு தள்ளியுள்ளது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலும் இஸ்ரேலினின் பதிலடியும். சுதந்திரமாக பறவைகள் பறந்து திரிந்த வானில் ஏவுகணைகளின் நெருப்பு ஜுவாலைகள் பரவ செய்த இந்த போருக்கு முக்கிய காரணியாக உள்ளது அல் அக்சா மசூதி. மக்கா மதினாவுக்கு அடுத்ததாக இஸ்லாமியர்களால் புனித தலமாக பார்க்கப்படுவது ஜெருசேலமின் மையப்பகுதியில் உள்ள அல் அக்சா மசூதி. அப்படிப்பட்ட புனித தலத்தில் இஸ்ரேல் அத்துமீறியதால்தான் தற்போது தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

அல் அக்சா மசூதி
அல் அக்சா மசூதி

அல் அக்சா மசூதி ஏன் போருக்கு முக்கிய காரணி என்பதை அதன் வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரியும். யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பழைய ரோமானியர்களுக்கு புனித தலமாக திகழ்கிறது ஜெருசலேம். இதில் யூதர்கள் முதலில் அதிகம் வாழ்ந்த பகுதி ஜெருசலேம் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதேபோல, நபிகளின் பயணத்தில் ஒரு பகுதியாக ஜெருசலேம் இருந்தது என்றும் இயேசு கிறிஸ்து பல அற்புதங்களை செய்த பகுதியாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஜெருசலேமில் அதிகமாக இருந்த யூதர்களின் வழிபாட்டு தலங்கள் தற்போது சுருங்கி ஒரே ஒரு சுவர் மட்டும்தான் உள்ளது.

மீண்டும் யூதர்கள் தனக்கென ஒரு நாட்டை அதாவது இஸ்ரேலை உருவாக்கிய பிறகு ஜெருசேலமை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அப்போதிலிருந்து இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதிதான் தற்போது நடைபெறும் போரும்.

யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' என்றும், முஸ்லிம்களால் 'அல்-ஹராம் அல்- ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' ஆகியவை உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் அவ்வப்போது பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலை தடுக்க ஜெருசலேமை சர்வதேச இடமாக அறிவிக்கலாம் என்ற 1946-ன் ஐ.நாவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

அதன்பிறகு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை 1948ம் ஆண்டு முதல் ஜோர்டான் கைப்பற்றி ஆட்சி நடத்தியது. ஆனால், 1967-ல் நடைபெற்ற ஆறுநாள் போருக்கு பிறகு கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதியில் மேலாதிக்கத்தை நிறுவிய இஸ்ரேல், ஜோர்டானுடன் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியது. அதன்படி, ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டனுக்கு உரிமை வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு இஸ்ரேல் அரசு அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறியது. அதுதான் தற்போதைய போருக்கான தொடக்கப்புள்ளியாக மாறியது. அதன்பிறகு ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவை ஒட்டிய பகுதிகளில் உள்ள முகாம்களில் அதிரடி சோதனை நடத்தியது இஸ்ரேல். அல் அக்ஸா மசூதி அருகே பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

கடந்த வாரம் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு கடந்த வாரம் சென்றபோது இஸ்ரேலிய படையினர் காலணிகளுடன் நுழைந்ததுடன், இஸ்லாமிய தலைவர்களின் கல்லரைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்தே தற்போது தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனிய ஆதரவு ஆயுத குழுவான ஹமாஸ் படையினர் தெரிவிக்கின்றனர்.

100 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைகளுக்கு இன்றளவும் தீர்வு கிடைக்கவில்லை. உலகின் புனித தலமாக உள்ள ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பதில்தான் போருக்கான தொடக்கமும் முடிவும் உள்ளது என்பதே வரலாற்றின் பின்னணி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com