பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியுள்ள மேஹூல் சோக்ஸி தனது இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் ஒப்படைத்துள்ளார்.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவரது உறவினருமான மேஹூல் சோக்ஸி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்ட விரோதமாக கடன் வாங்கி ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிரவ் மோடி, மேஹூல் சோக்ஸியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து தப்பி ஆண்குடிவாவில் தஞ்சம் புகுந்துள்ள மேஹூல் சோக்ஸி தனது இந்திய குடியுரிமையை தற்போது துறந்துள்ளார். மேலும் தனது இந்திய நாட்டு பாஸ்போர்ட்டையும் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அவர் ஒப்படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்கவே அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண்டிகுவா நாட்டு குடியுரிமையை பெற்றிருந்தார் மேஹூல் சோக்ஸி. இதனிடையே மேஹூல் சோக்ஸிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அவரை கைது செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கிய நிலையில், அவர் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்துள்ளார்.