\
francis halzen
francis halzen reuters

பிரபஞ்ச ரகசியம்! கண்ணுக்குத் தெரியாத மர்ம துகள்கள்.. நோபல் பரிசு பெற்ற francis halzen!

உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது... நேற்று முதல் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Published on: 
Summary

2026 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஃபிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்பட்டது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின் மூலம் பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்து, பிரபஞ்ச ரகசியங்களை வெளிக்கொணர்ந்த அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

2026-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கான அவரது தீர்மானகரமான பங்களிப்பு மற்றும் வானியல் மூலத்திலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களின் கண்டுபிடிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அப்படி... அவர் மேற்கொண்ட ஆய்வு என்ன? இந்த ஆய்வு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பதைப் பார்க்கலாம்.

நம்மைச் சுற்றிலும்... ஏன், நம் உடலுக்குள்ளேயே கூட ஒவ்வொரு நொடியும் ஏராளமான நியூட்ரினோக்கள் கடந்து செல்கின்றன! ஆனால், இந்தத் துகள்கள் இருப்பதையே நம்மால் உணர முடியாது. அவை எங்கிருந்து வருகின்றன... எப்படி உருவாகின்றன... போன்ற பல கேள்விகளுக்கு நீண்ட காலமாக விடை தேடப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட மர்மமான துகள்களான நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம், பிரபஞ்சத்தின் ஆழத்தில் நடைபெறும் மிகப்பெரிய ஆற்றல் கொண்ட நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் புதிய வழியை உருவாக்கியவர்தான் ஃபிரான்சிஸ் ஹால்சன்.

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத, மிகக் குறைந்த நிறை கொண்ட அடிப்படைத் துகள். இவை பொருளுடன் மிகவும் அரிதாகவே வினைபுரிவதால், ஏராளமான நியூட்ரினோக்கள் நம்முடைய உடலையும், பூமியையும் கடந்து செல்கின்றன. இதனால்தான், நியூட்ரினோக்களை நேரடியாகக் கண்டறிவது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், ஃபிரான்சிஸ் ஹால்சன் ஒரு முக்கியமான யோசனையை முன்வைத்தார்...

francis halzen
francis halzenreuters

பூமியின் தென்துருவத்தில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பரப்பையே ஒரு பிரம்மாண்டமான நியூட்ரினோ கண்டறியும் கருவியாகப் பயன்படுத்த முடியும் என்ற யோசனையை முன்மொழிந்தார்...இந்த யோசனையின் அடிப்படையில்தான் அண்டார்டிகாவில் ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் உருவாக்கப்பட்டது.

சுமார் ஒரு கன கிலோமீட்டர் அளவிலான அண்டார்டிகா பனிக்கட்டிக்குள் ஆயிரக்கணக்கான ஒளி உணரிகளைக் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நியூட்ரினோ அரிதாக பனியில் உள்ள அணுக்களுடன் வினைபுரியும்போது, உருவாகும் ஒளியை இந்தக் கருவிகள் பதிவு செய்கின்றன. அதன்மூலம், அந்த நியூட்ரினோ எங்கிருந்து வந்தது என்பதையும், அது உருவான பிரபஞ்ச நிகழ்வு குறித்த தகவல்களையும் விஞ்ஞானிகள் கண்டறிய முடிகிறது.

அதாவது... தொலைதூர பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆற்றல் கொண்ட விண்வெளி நிகழ்வுகள் குறித்த தகவல்களை, ஒளியின் மூலம் மட்டுமல்லாமல் நியூட்ரினோக்கள் மூலமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, மிகப்பெரிய கருந்துளைகள், செயலில் உள்ள விண்மீன் மண்டலங்கள் போன்ற வானியல் மூலங்களிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை ஐஸ்கியூப் ஆய்வகம் தொடர்ந்து தேடி வருகிறது. இதன்மூலம், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஒரு புதிய வழி திறக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஃபிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

francis halzen
அரபு உலகில் தொடங்கிய அடுத்த போர்.. களமிறங்கிய பாக்., துருக்கி.. முடிவுக்கு வருமா ஈரானின் ஆதிக்கம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com