பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்

பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்
பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் ‘மஞ்சள் சட்டை’ என்று பெயரிடப்பட்டுள்ள போராட்டங்கள் வன்முறைக்கு மாறியுள்ள நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.

என்ன செய்தது பிரான்ஸ் அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரியை விதித்தது அதிபர் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசு. இந்த நடவடிக்கைக்கு பிரான்ஸ் அரசு சில காரணங்களை கூறியது. உலக வெப்பமயமாதலை தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் என பிரான்ஸ் அரசு கூறிய காரணங்கள் அந்நாட்டு மக்களை கோபமடைய செய்தது.

கூடுதல் வரியால் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதனால், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதோடு நிற்காமல், வரி விதிப்பு 2019-ம் ஆண்டு மேலும் உயரும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்தது. 

முதல் கொந்தளித்தது டிரைவர்கள்

பெட்ரோல், டீசல் மீதான வரியால் மக்கள் கடுமையான கோபத்தில் இருந்தார்கள். இருப்பினும், கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர். பின்னர் தான் அது மக்களின் போராட்டமாக மாறியது. போராட்டத்தில் குதித்தவர்கள் டிரைவர்களின் சீருடையை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற ஆடையை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக தீயாக பரவியது.  

போராட்ட களமானது பாரிஸ்

இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் தீவிரமான போராட்டங்களால் பாரிஸ் நகரம் மட்டுமல்ல பிரான்ஸ் நாடே ஸ்தம்பித்து போனது. குறிப்பாக இந்தப் போராட்டங்கள் இளைஞர்கள் தீவிரமாக கையிலெடுத்தனர். பாரிசில் கடைகள் சூறையாடப்பட்டன. கார்கள், கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதிபர் மக்ரோனுக்கு எதிராக போராட்டம் தீவிரமானது. இதனால், நிறைய இடங்களில் வன்முறை ஏற்பட்டன. இந்தப் போராட்டத்தில் பிரான்ஸின் அடையாளமாக திகழும் மரியன்னே சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் 

இரண்டு வாரமாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. நேற்று(சனிக்கிழமை) மட்டும் நாடு முழுவதும் சுமார் 36 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இரண்டு வாரங்களில் 3 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக கடைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. போலீசாரின் வாகனங்களுக்கே பல இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அவ்வளவாக பலன் கிட்டவில்லை.

அதிபர் மக்ரோனுக்கும் அவரது அரசுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏனெனில் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே அரசு கடைபிடித்து வந்த திட்டங்களை இந்த அரசு நீட்டித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டம் பிரான்ஸின் மேட்டுக்குடி மக்களுக்கும் கிராமப் புற ஏழை மக்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸில் எமெர்ஜென்ஸி?

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக நாட்டில் அவசர நிலையை கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கிரிவியக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிபர் மக்ரோன் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். வன்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய அதிபர் மக்ரோன் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com