முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்| தனது நிலையிலிருந்து சரிந்த மோடி!
எந்த ஒரு தனிநபரையும் தாராளமாகப் புகழ்வது மோடிக்கு வழக்கமல்ல, ஆனால் நான்கு நாள்களுக்குள் இரண்டு முறை ஒருவரைப் புகழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அப்படி மோடியின் புகழ்ச்சிக்கு உரியவராக இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அப்படிப் புகழ்ந்ததற்கான காரணம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் அறிவித்த ‘20 அம்ச சமாதான திட்டம்’.
‘காஸாவில் நிகழும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முழுமையான திட்டம்’ என்று அந்த சமரச திட்டத்தை 2025 செப்டம்பர் 30-ல் புகழ்ந்தார் மோடி. பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலியர்களும் வளர்ச்சி பெறவும், அந்தப் பகுதி மட்டுமல்ல - மேற்காசியா முழுவதுமே சமரசத்துடனும் பாதுகாப்பாகவும் திகழ நீண்டகாலத் தீர்வுக்கான செயல்படுத்தக்கூடிய வழியை இந்த திட்டம் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார். அதோடு நிற்காமல் ஒருபடி மேலே போய், தன்னுடைய பாராட்டு அறிக்கையை ஏழு மொழிகளில் – அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானியம், எபிரேயம் (ஹீப்ரு) ஆகியவற்றுடன் மறவாமல் இந்தியிலும் – வெளியிடச் செய்தார். “அதிபர் ட்ரம்பின் தலைமையும் சமாதான முயற்சிகளும் காஸா நிலப்பகுதியில் திட்டவட்டமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நாங்கள் வரவேற்கிறோம்” என்று அக்டோபர் 4இல் அறிவித்தார் மோடி.
இந்தக் கட்டுரையை எழுதும்போது, ட்ரம்பின் சமாதான திட்டத்தின் முதல் பகுதியை ஹமாஸும் இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டுள்ளன. தான் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவிக்கும், இஸ்ரேல் தன்னுடைய ராணுவத் தாக்குதலை நிறுத்திவைக்கும். இது எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது கூறப்படாவிட்டாலும், ‘வெகு விரைவில்’ என்பது புரிகிறது. காஸா நிலப்பரப்பில் வாழும் பாலஸ்தீனர்கள் உயிரச்சம் நீங்கியவர்களாக நிம்மதியுடனும், இஸ்ரேலியர்கள் மகிழ்ச்சியுடனும் இதை வெளிப்படையாகவே வரவேற்றனர். இந்த திட்டத்தின் சில பகுதிகளுக்கு – குறிப்பாக பாலஸ்தீனர்களின் நிலப்பரப்பை வெளியார்களை நிர்வாகிகளாகக் கொண்ட ஆணையம் கட்டுப்படுத்தும் சமரசத்தை – ஹமாஸ் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆபத்தான தொடக்கம்
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட ஜனவரி 20, 2025 நாள் முதல், இந்தியாவை சிறுமைப்படுத்தியும் இந்தியப் பொருளாதாரத்தை சேதப்படுத்தியும் செயல்பட்டுவரும் டிரம்பை மோடி எதற்காக இந்த அளவுக்கு வரம்பின்றிப் புகழ வேண்டும், அவர் ஏன் இதன் மூலம் தன்னுடைய பதற்றத்தை வெளிப்படுத்துகிறார் என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் முறையின்போதே (2017-2021) இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காப்பு வரியை விதித்தார் ட்ரம்ப்; உருக்கின் மீது 25%, அலுமினியத்தின் மீது 10% வரிகளை விதித்த பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துவந்த, ‘வரிச் சுமையிலிருந்து பொது விலக்கு’ சலுகையை முறித்துவிட்டார். 2020இல் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சில வகை ‘விசா’ அனுமதிகளை, குறிப்பாக ‘எச்-1பி’ ஆகியவற்றை ட்ரம்ப் நிறுத்திவிட்டார். அதற்கும் முன்னதாக 2019 செப்டம்பர் 22இல் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் பங்கேற்ற மோடி, ‘அடுத்த முறை – ட்ரம்பின் ஆட்சி’ என்று அவருக்கு சார்பாக அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு மறைமுக வேண்டுகோள் விடுத்தார்.
இப்போது இரண்டாவது முறையாக அதிபராகியுள்ள ட்ரம்ப், முதல் 9 மாதங்களிலேயே இந்தியா மீது (பிரேசில் மீதும்) அதிகபட்ச அளவுக்கு காப்பு வரிகளை விதித்திருக்கிறார். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துவந்த உருக்கு, அலுமினியம், ஜவுளிப் பொருள்கள், நவரத்தினக் கற்கள், தங்க நகைகள், கடல் உணவு (மீன் உள்ளிட்டவை), மருந்து-மாத்திரைகள், தோல் காலணிகள், அறைகலன்கள் (ஃபர்னிச்சர்கள்), மோட்டார் கார்கள், பொம்மைகள் ஆகியவற்றை விற்க முடியாதபடிக்கு அதிக காப்பு வரி விதித்து விலைகளை உயரச் செய்திருக்கிறார். ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியுதவி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தார்.
ரஷ்யாவிடமிருந்து இப்படியே தொடர்ந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தால் உங்களுடைய பொருளாதாரத்தையே நாசப்படுத்தும் விதத்தில் மேலும் வரிகளை உயர்த்துவதுடன் பல்வேறு தடை நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று எச்சரித்தார் ட்ரம்பின் நெருங்கிய சகாவான செனட்டர் லிண்ட்சே கிரஹாம். இந்தியாவை ‘காப்பு வரி மன்னன்’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டார் ட்ரம்ப். அவருடைய வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ அவரைவிட நாராசமாக இந்தியாவைக் கண்டித்தார்.
‘ரஷ்யா – இந்தியா இரண்டுமே செத்துவிட்ட பொருளாதாரங்கள்’ என்றார் ட்ரம்ப். ‘எச்-1பி’ விசா மனுவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்று கடுமையாக உயர்த்தினார் ட்ரம்ப். இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகள் அமெரிக்காவில் குடும்பத்துடன் சேரவும், இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலவும் கடுமையான விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை 2025 பிப்ரவரி – மே மாத காலத்தில் கை – கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானங்களில் ஏற்றி, கட்டாயமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்.
பாகிஸ்தானுக்கே சலுகை
பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகும், அந்த நாட்டுக்கு நிதியுதவி செய்யாதீர்கள் என்று இந்தியா எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அந்த உதவிகள் கிடைக்க ட்ரம்ப் உதவினார்; பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) 100 கோடி அமெரிக்க டாலர்கள், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து (ஏடிபி) 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள், உலக வங்கியிடமிருந்து 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் கிடைக்க அமெரிக்காவே காரணமாக இருந்தது. ‘பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நிறுத்த தான் மேற்கொண்ட தலையீடே முக்கியக் காரணமாக அமைந்தது’ என்று – இந்தியா தொடர்ந்து மறுத்த பிறகும் கூட – கூறுகிறார் ட்ரம்ப்.
இவையெல்லாவற்றையும்விட இந்தியாவுக்கு மிகப் பெரிய அவமானம் எதுவென்றால், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதியை வெள்ளை மாளிகைக்கு ஜூன் 18இல் வரவேற்று அவரை கௌரவிக்கும் வகையில் - இதுவரை இருந்திராதபடிக்கு - பெரிய விருந்தை அளித்ததுதான். பாகிஸ்தானின் பிரதமர், ராணுவத் தலைமை தளபதி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து செப்டம்பர் 25-ல் பேசினார் ட்ரம்ப்; இருவரையும் ‘பெருந் தலைவர்கள்’ என்றும் பாராட்டினார். மிகவும் அரிதான கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்க இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அறிவித்தார்.
பாகிஸ்தானியப் பண்டங்களுக்குக் குறைந்த காப்பு வரி விகிதத்தில் வணிக உடன்பாட்டையும் செய்துகொண்டதாக அறிவித்தார். பாகிஸ்தானியப் பொருள்களின் மீதான காப்பு வரி அதிகபட்சம் 19% மட்டுமே. அரபிக் கடலில் உள்ள தங்களுடைய துறைமுகத்தை விரிவுபடுத்தி பயன்படுத்திக் கொள்ளும்படி ட்ரம்பைக் கேட்டுக்கொண்டனர் பாகிஸ்தானின் அவ்விரு பெருந்தலைவர்கள். அமெரிக்கா மீது அல்-கொய்தா பயங்கரவாதிகள் 2001 செப்டம்பர் 11இல் நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதல்கள், பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் மறைந்து வாழ அரசே அளித்த புகலிடம், அபோடாபாத் சம்பவம், பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் என்று முன்னர் இகழ்ச்சியாகப் புகழ்ந்த தருணம் என்று அனைத்தையும் மறந்துவிட்டது அமெரிக்கா. ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகள் மீது (அமெரிக்கா- சீனா) சவாரி செய்யும் கலையில் தேர்ந்துவிட்டது பாகிஸ்தான்.
இந்தியாவுக்கு சாதகமான செயல் என்று 2025 ஜனவரிக்குப் பிறகு குறிப்பிட ஒரு நடவடிக்கையையும் அமெரிக்க நிர்வாகம் எடுக்கவில்லை. இந்திய – அமெரிக்க உறவு இப்போது கீழ் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியோ சரியும் இந்த படிக்கட்டுகளில் விழுந்துவிடாமல் நடக்க கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கொல்லப்படும் கனவுகள்
பாலஸ்தீனர்களை விரக்திகொள்ள வைத்திருக்கும் இந்த சமாதான திட்டத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ட்ரம்பை மகிழ்விக்க இந்தியா ஏன் இப்படித் துடிக்கிறது என்ற புதிரான கேள்வி எழுகிறது. அதற்கான விடை சமாதான திட்டத்தின் 19-வது அம்சத்தில் இருக்கிறது: “காஸாவின் மறு வளர்ச்சி அதிகரிக்கும்போது, பாலஸ்தீன ஆணையக திட்டம் முழுமனதுடன் நிறைவேற்றப்படும்போது, பாலஸ்தீனத்தின் சுய நிர்ணய உரிமைக்கும், தனி நாடு அந்தஸ்துக்குமான நம்பத்தக்க வழிமுறை ஏற்பட்டுவிடும்”.
என்னுடைய கருத்துப்படி இந்த சமரச ஏற்பாட்டின் மூலம் காஸாவில் போர் நிறுத்தம் இறுதியாக ஏற்படலாம், பிணைக் கைதிகளோ அவர்களுடைய சடலங்களோ ஒப்படைக்கப்படலாம், மனிதாபிமான அடிப்படையில் உணவு, குடிநீர், மருந்து- மாத்திரைகள் பாலஸ்தீன மக்களுக்கும் கிடைக்கலாம்; ஆனால் காசா நிலப்பரப்பானது அதிபர் ட்ரம்ப், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் போன்ற ‘அமைதிக் காவலர்கள் வாரியத்தால்’ தொடர்ந்து கண்காணிக்கப்படும். ‘இறையாண்மையுள்ள சுதந்திர தனி நாடு’ என்ற பாலஸ்தீனர்களின் கனவு இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட இறந்தேவிட்டது.
வெளியுறவுக் கொள்கையில் தங்களுக்குப் பெரிய வெற்றி கிடைத்துவிட்டதைப்போல இதுவரை வெற்றாக மார் தட்டி வந்த பிரதமர் மோடி இப்போதுதான் உண்மையை உணர்ந்திருக்கிறார்; உலக அரங்கில் இந்தியாவுக்கு இப்போது மிகச் சிலர்தான் ‘உண்மையான நண்பர்களாக’ இருக்கிறார்கள், காப்பு வரி அதிகரிப்பு, பொருளாதாரத் தடை போன்றவற்றைத் தாங்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வலுவாக இல்லை. அறிவுபூர்வமான ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கும், வலிமையான வர்த்தக – முதலீட்டுக் கொள்கைகளுக்கும் மாற்று எதுவுமில்லை என்பதையும் மோடி உணர்ந்தாக வேண்டும்.