துபாய் தப்பிச் சென்றார் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக்?
அரிசி மானியத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய்க்கு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது ஏழை விவசாயிகள் நலனுக்காக அரிசி மானியத் திட்டத்தை அமல்படுத்தினார். இந்தத் திட்டத்தில் பலகோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை மறுநாள் இவ்வழக்கில் அவருக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
இந்நிலையில் ஷினவத்ரா சிங்கப்பூர் வழியாக துபாய் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை பிரச்னை இருப்பதால் தீர்ப்பு நாளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்காத உச்சநீதிமன்றம் அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.