”இப்படி நடக்குமென நினைக்கவில்லை” - ஆபாச பட நடிகை வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைதாகி விடுதலை! முழுவிபரம்

ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
Trump
TrumpPTI

பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிபர்!

2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை தான் அதிபராக இருந்த காலம் மட்டுமல்லாமல், அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய பின்பும் இன்றுவரை டொனால்ட் ட்ரம்ப் உலக அளவில் பேசு பொருளாகவே இருக்கிறார். அதிரடியான அறிவிப்புகளாலும், சர்ச்சைக்குரிய பேச்சுகளாலும் தன்னுடைய ஆட்சி காலத்தை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வைத்திருந்தார் ட்ரம்ப். தேர்தலுக்கு பிந்தையை வெள்ளை மாளிகை கலவரம் தொடங்கி ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் நீக்கம்-சேர்ப்பு வரை எப்போதும் டைம் லைனில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்.

இத்தகைய சூழலில்தான், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் காவல்துறையினரால் முறையாக கைதுசெய்யப்பட்டிருக்கும் டிரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர்களில் குற்றம் சார்ந்து கைதான முதல் முன்னாள் அதிபர் என்ற மோசமான பெருமையை பெற்றுள்ளார்.

அப்படி என்னதான் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு?

டொனால்ட் ட்ரம்ப் மீது அதிபர் மாளிகை கலவரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவகாரங்களில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பற்றி எரிந்து கொண்டிருப்பது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுதான்.

ஆபாச நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

2017 ஆம் ஆண்டு அதிபர் ஆவதற்கு முன்பாகவே இந்த குற்றச்சாட்டு ட்ரம்ப் மீது வைக்கப்பட்டது. அதாவது, டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனை மறைப்பதற்காக சுமார் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்களை தனக்கு கொடுத்ததாகவும் 2016ஆம் ஆண்டே ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியிருந்தார். இதில் சிக்கல் என்னவென்றால், இந்த 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் பணமானது தேர்தல் நிதியில் கணக்கு காட்டப்பட்டுள்ளது என்பதுதான் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி தரப்பில் முன் வைக்கப்படும் முக்கியமான குற்றஞ்சாட்டாக இருக்கிறது.

Trump
TrumpPTI

நியூயார்க் சிட்டியின் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி அமைப்பானது ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை ஆராய ஆரம்பித்ததிலிருந்தே, அந்த விவகாரமானது விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது. மேலும், எப்போது இந்த விவகாரம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்காக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

சரண்டர் ஆன டொனால்ட் ட்ரம்ப்!

இவ்வழக்கின் கீழ் நியூயார்க்கில் உள்ள மன்ஹட்டன் நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் சரணடைந்த நிலையில், அவர் காவல்துறையினரால் முறையாக கைது செய்யப்பட்டார். ட்ரம்ப் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. பின்னர் வழக்கானது நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.

அதற்கு பிறகு, நீதிமன்றத்தில் இருந்து நேராக புளோரிடாவிற்கு புறப்பட்டு சென்ற ட்ரம்ப், அங்கு மார்-ஏ-லாகோ எஸ்டேட் பால்ரூமில் கூடியிருந்த தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Trump
TrumpPTI

இப்படியெல்லாம் நடக்கும் என நினைக்கவில்லை! - ட்ரம்ப்

ட்ரம்ப் பேசுகையில், “இப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடக்குமென நான் நினைத்துகூட பார்க்கவில்லை. அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் குறுக்கீடு தற்போது நடந்துள்ளது. அவர்களால் எங்களை வாக்குப்பெட்டியில் வெல்ல முடியாது என்பதற்காக சட்டத்தின் மூலம் வெல்ல முயற்சிக்கிறார்கள். தற்போது இந்த தேசமே சரிவை நோக்கி செல்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

”அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்த நிமிடங்கள்”

“நான் செய்த ஒரே தவறு, இந்த தேசத்தை அழிக்க நினைத்தவர்களை எதிர்த்து போராடியது மட்டுமே. 2024 தேர்தலை மனதில் வைத்து தான் இப்படி எல்லாம் செயல்பட்டு வருகின்றனர். இவ்வழக்கை உடனடியாக திரும்ப பெறவேண்டும். நம் நாட்டை காப்பாற்றியாக வேண்டும். எல்லைகளை திறந்து வைத்திருப்பது, ஆப்கானிஸ்தானிற்கு மில்லியன் கணக்கான உபகரணங்களை வழங்குவது போன்றவற்றுக்காக இந்த உலகம் ஏற்கெனவே நம்மை நோக்கி சிரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க வரலாற்றின் இருள் சூழ்ந்த நிமிடங்களை நாம் தற்போது அனுபவித்து வருகிறோம். இத்தனை குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், மிகவும் இருண்ட மேகத்துடன் எதிர்த்து போராடி, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் அதனை எதிர்நோக்கி உற்சாகமாக இருக்கிறேன்” என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.

Trump
TrumpPTI

ஆனால் 2016 அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு பெண்களுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக ட்ரம்ப் பணம் கொடுத்தது, வணிக ரீதியான பதிவுகளை மாற்றி பொய்யாக சமர்பித்தது, தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அதிபர் மாளிகை கலவரம் என்பன உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகளில் மன்ஹாட்டன் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com