புயல், வெள்ளம், சூப்பர் எல்.நினோ.. 2027-இல் காத்திருக்கும் அதிர்ச்சி.. பேரழிவு இனிதான் ஆரம்பமா?
செய்தியாளர் - கார்த்திகேயன்
2026-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிதீவிர கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை என்று திரும்பும் பக்கமெல்லாம் கண்ணிவெடியாகவே உள்ளது. இதுமட்டுமின்றி, எல் நினோ என்ற காலநிலை மாற்றமும் புதிதாக உருவாக, மக்களை பெரும் வறட்சியில் தள்ளியுள்ளது.
இயற்கையின் இந்த தாக்குதலில் இருந்தே எப்படி தப்பிப்பது என்று உலக மக்கள் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இது வெறும் ஆரம்பம்தான், அடுத்த வருடம்தான் காத்திருக்கிறது உண்மையான பிரச்னை என்று தகவல் வெளியாகியுள்ளது.
3 முக்கியப் பிரச்னைகள் ஏற்பட்டு, உலகின் உணவுப் பணவீக்கம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, விவசாயத்திற்கு உரம் மிகவும் முக்கியமான ஒன்று. யூரியா, அமோனியா ஆகிய உரங்கள், 27 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை மத்திய கிழக்கில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போர் நடந்து வருவதால், அங்குள்ள உர உற்பத்தி நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இதனைச் சீரமைக்கவே 4 ஆண்டுகளுக்கு மேலாகும். சரியான நேரத்தில் உரமிடத் தவறினால் பயிர் விளைச்சல் கணிசமாகக் குறையும். இதுமட்டுமின்றி, முக்கிய விவசாயப் பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையின் மாதிரிகளை சூப்பர் எல் நினோ மாற்றி, வறட்சி, வெள்ளம், புயல் போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரு காரணிகளின் மூலம், 2026-ஆம் ஆண்டில் 2.8% ஆக இருந்த உலகளாவிய உணவுப் பணவீக்கம், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 5% ஆக உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்மேற்குப் பருவமழையை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவில், இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும். எல் நினோ பொதுவாக இந்தியக் கோடைகாலப் பருவமழையைப் பலவீனப்படுத்துகிறது. பருவமழை சீரற்றுப் பொழிந்தால் அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.

