''எனக்கு நண்பனாக இருப்பீர்களா?'' - போலீசாருக்கு போன் செய்த 6வயது சிறுவன்!
போலீசாரின் அவசர எண்ணுக்கு போன் செய்து தனக்கு நண்பனாக ஆக முடியுமா என கேட்ட சிறுவனுக்கு அமெரிக்க காவல்துறை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது
ஒரே வீட்டில் வசித்தாலும், குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரமாக பேசி சிரிப்பதே தற்போது அதிசயமாக மாறிவிட்டது.
'ஃபேமிலி' என உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில் பேசுவதைக் கூட நேரில் யாரும் பேசிக்கொள்வதில்லை. பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்காமல் தவறிவிடுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள் தனிமையில் சிக்கி மன உளைச்சலுக்கு கூட ஆளாகின்றனர். அப்படி தனிமையை உணர்ந்த சிறுவன் ஒருவன் போலீசாரின் அவசர எண்ணுக்கு போன் செய்து 'நண்பனாக இருக்க முடியுமா' என்று கேட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டல்லஹாசி போலீசாரின் அவசர எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய 6 வயது சிறுவன், ''நான் தனிமையாக இருக்கிறேன். நீங்கள் என் நண்பனாக இருக்க முடியுமா?'' என்று கேட்டுள்ளான். பதட்டம், பரபரப்பு என்று கேட்டே பழக்கப்பட்ட போலீசாருக்கு சிறுவனின் குரலும், கோரிக்கையும் புது வித அனுபவத்தைக் கொடுத்துள்ளது. உடனடியாக கையில் பொம்மையுடன் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவனை போலீசாரின் காரில் ஒரு ரவுண்டும் அழைத்துச் சென்று அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவசர எண் என்றால் என்ன, அது எதற்கெல்லாம் பயன்படும் என்ற அறிவுரையும் சிறுவனுக்கு வழங்கியுள்ளனர். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள டல்லஹாசி போலீசார், ''எங்களுக்கு புதிய நண்பன் கிடைத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளனர்.