
கிரீஸில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அளவுக்கு அதிகமாக சுட்டெரித்த வெயிலால் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிந்தநிலையில், தற்போது டேனியல் புயல் காரணமாக பெருமழை பொழிந்துள்ளது.
1930-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த இந்த இயற்கை பேரிடரால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கார்டிட்ஸா நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளின் மேற்கூரை மட்டுமே தெரியும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மேலும் பெருவெள்ளத்தால் வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் நீரில் மூழ்கியிருப்பதால் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
பல கிராமங்களில் குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.