இர்மா புயல் தாக்கியதால் வெள்ளக்காடானது அமெரிக்காவின் புளோரிடா

இர்மா புயல் தாக்கியதால் வெள்ளக்காடானது அமெரிக்காவின் புளோரிடா

இர்மா புயல் தாக்கியதால் வெள்ளக்காடானது அமெரிக்காவின் புளோரிடா
Published on

ஹார்வீ புயல் தாக்கிச் சென்ற ஒரு வாரத்துக்குளாகவே இர்மா புயலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது அமெரிக்கா. இந்த முறை அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள தீபகற்பப் பகுதியான ஃபுளோரிடா புயலை எதிர்கொண்டிருக்கிறது.

ஒரு கடற்கரையில் இருந்து மறு கடற்கரை வரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சிதறடித்திருக்கிறது இர்மா புயல். மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. கூடவே கனமழை பெய்து கொண்டிருக்கிறது. புளோரிடா ஒரு தீபகற்பம் போன்ற பகுதி என்பதால் இரண்டு கடற்கரைப் பகுதிகளையும் இர்மா புயல் மிக வேகமாகத் தாக்கியிருக்கிறது. கன மழை காரணமாக ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி இருக்கிறது. மின் இணைப்புக்கான கட்டுமானங்கள், தொலைத் தொடர்பு வசதிகள் உள்ளிட்டவை சேதமடைந்திருக்கின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

காருக்குள் பதுங்கியிருக்கலாம் என்று நினைத்தவர்களையும் புயல் விட்டுவைக்கவில்லை. புயலின் வேகத்துக்கு பல கார்கள் தலைகீழாகத் தூக்கி வீசப்பட்டிருக்கின்றன. புளோரிடாவின் கடலோரப் பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து சில அடி உயரத்திலேயே அமைந்திருப்பதால், புயலின் பாதிப்பு கடுமையாக உள்ளது. கடலோர விடுதிகள், குடியிருப்புகள் போன்றவை வேகமான காற்றால் சேதமடைந்திருக்கின்றன. மிக உயரமான கட்டங்களில் இருந்தவர்களும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேல்தளக் கூரைகள் சேதமடைவதால் அவர்களையும் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது புளோரிடாவின் கடலோரப் பகுதிகளில் சுமார் 10 அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதாகவும், இந்த நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். டாம்பா, மயாமி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. புளோரிடா கீஸ் என்ற தீவுத் தொடர்களை புயல் முற்றிலுமாகச் சேதப்படுத்தியிருக்கிறது.

புளோரிடாவுக்கு வருவதற்கு முன்னதாக, கரீபியன் பகுதியின் பல நாடுகளைச் சூறையாடியிருக்கிறது இர்மா புயல். கியூபாவில் தலைநகர் ஹவானா உள்ளிட்ட நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பார்படா உள்ளிட்ட தீவுகள் வாழத் தகுதியற்ற நிலைக்கு மாறிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரீபியன் பகுதியில் ஆவேசமாகத் தொடங்கிய இர்மாவின் சீற்றம், படிப்படியாகக் குறைந்த பிறகே அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கிறது.

புளோரிடாவைப் பொறுத்தவரை, இர்மா புயல் நேரடியாகத் தாக்காத பகுதிகளில்கூட கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து அண்டை மாநிலங்களுக்குள் செல்ல இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் வந்திருக்கும் மிகப்பெரிய புயல் என்பதால், சேதத்தில் இருந்து புளோரிடா மாநிலமும், கரீபியன் நாடுகளும் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com