விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை... பயணிகள் அலறல்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை... பயணிகள் அலறல்
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை... பயணிகள் அலறல்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

துருக்கி நாட்டின் அன்காரா நகரில் இருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்வ் நகரை நோக்கி கடந்த 21-ம் தேதி 'சன் எக்ஸ்பிரஸ்' நிறுவன விமானம் சென்றது. அப்போது விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்டிருந்த உணவில், பாம்பின் தலை இருந்திருக்கிறது. இதனை பார்த்த அந்தப் பயணி பயத்தில் அலறியிருக்கிறார். மேலும், மற்ற பயணிகளுக்கும் இது தெரியவந்ததால் தங்கள் உணவை அதிர்ச்சியில் அவர்கள் கீழே கொட்டினர். சிலர் வாந்தி எடுத்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உணவு விநியோகிக்கும் கேட்டரிங் நிறுவனத்திடம் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர். இதனிடையே, பாம்பு தலை இருக்கும் உணவுத் தட்டை அங்கிருந்த பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.

இதனால் சிறிது நேரத்திலேயே இந்த விவகாரம் பூதாகரமானது. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உணவில் பாம்பு தலை இருந்தது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று. இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. ஆனால் ஒருமுறை கூட இதுபோன்ற சம்பவம் நடந்தது கிடையாது. பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். உணவில் பாம்பு தலை இருந்ததற்காக கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறோம். அவர்களிடம் விளக்கமும் கேட்டுள்ளோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com