தடைகள் டு தண்டனைகள்.. 5 ஆண்டுகளை நிறைவுசெய்த தாலிபன் அரசு.. நிகழ்ந்தவை என்ன?
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதாவது வளர்ச்சி, பொருளாதாரம், கட்டுப்பாடுகள், தடைகள், வழக்குகள், அயல்நாட்டு உறவுகள் குறித்து இந்த கட்டுரையில் அறியலாம்.
2021-இல் அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன்கள் மீண்டும் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி் அமைத்தனர். இந்தச் சூழலில்தான் அவர்களது ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 5 ஆண்டுகாலத்தில் ஆப்கானில் வன்முறைகள் குறைந்து பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும், தீவிரவாத அமைப்பிற்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,200-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு, சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக,
* கோஷ் தேபா கால்வாய் (Qosh Tepa Canal) திட்டம். இத்திட்டத்தின் மூலம் அமு தர்யா நதிநீர் திருப்பிவிடப்பட்டு, 5.5 லட்சம் ஹெக்டேர் பாலைவனப் பகுதிகள் பாசன நிலமாக மாற்றப்பட இருக்கிறது.
* அதேபோல், 225 கிலோ மீட்டர் நீளமுள்ள ஈரான்-ஆப்கான் இடையிலான 'காஃப்-ஹேரத் இரயில் பாதை' (Khaf-Herat Railway) திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதன்மூலம் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேம்பட இருக்கிறது.
* அடுத்து, தாபி (TAPI) எரிவாயுக் குழாய் திட்டத்தை, துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளுடன் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறது.
இப்படி... பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தும் பணிகளைச் செயல்படுத்தி வரும் ஆப்கான் அரசு, வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. சீனாவின் சி.என்.பி.சி (CNPC) நிறுவனத்துடன் இணைந்து அமு தர்யா நதிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுக்க 540 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை அமல்படுத்தியுள்ளது. எனினும், பெண்களின் குரல்கள் பொதுவெளியில் ஒலிப்பதற்கும், ஆடைகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பெண்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,
* 6-ஆம் வகுப்பிற்கு மேல் சிறுமிகள் கல்வி பயிலத் தடை,
* உயர்கல்வி மற்றும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகளில் பெண்களுக்குத் தடை
* அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் பெரும்பாலான வணிக அமைப்புகளில் பெண்கள் பணிபுரியத் தடை
* இரத்த உறவுடைய ஆண் துணை (மஹ்ரம்) இல்லாமல் பெண்கள் 72 கி.மீ-க்கு மேல் தனியாகப் பயணிக்கத் தடை
* பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டரங்கங்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு (Beauty Parlors)செல்லத் தடை
* இசை மற்றும் சில கலை வடிவங்களுக்குத் தடை
* எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க முற்றிலுமாகத் தடை
அதேநேரத்தில், இந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்குத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,
* ஆடை விதிகளை மீறியது, ஆண் துணை இன்றி பயணித்தது மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பொது இடத்தில் கசையடி (Public Flogging) தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
* 'மோசமான ஹிஜாப்' (Bad Hijab) மற்றும் தாலிபனுக்கு எதிரான உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஹெராத் (Herat) நகரில் ஒரேநாளில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆடை விதியை மீறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, தாலிபன் அமைப்பினரால் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 21 பாலியல் வன்முறை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாயத் திருமண வழக்குகளும் இதில் அடங்கும்.
இப்படி, பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தண்டனைகளும் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியாக இருந்த சிறப்பு நீதிமன்றங்கள், வழக்குரைஞர் பிரிவுகள் மற்றும் மகளிர் உதவி மையங்களை தாலிபன் அரசு முற்றிலும் கலைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதேநேரத்தில், போதைப்பொருள் தயாரிப்பிற்கான கசகசா (Opium Poppy) பயிரிடுவதற்கு நாடு முழுவதும் கடுமையான தடை விதித்திருப்பது உலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், தாலிபன் அரசை சர்வதேச நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காததால் தூதரக ரீதியான தனிமைப்படுத்தலும் பொருளாதாரத் தடைகளும் நீடிக்கின்றன. இருப்பினும், சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளைத் தாலிபன் அரசு தொடர்ந்து பேணி வருகிறது. முந்தைய ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் பல்வேறு மாற்றங்களும் திட்டங்களும் இருந்தாலும்கூட, பெண்களுக்கு எதிரான தடைகளாலும் அடக்குமுறைகளாலும் அந்நாடு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது என்பதுதான் உண்மை

