40 ஆண்டுகள் தடை நீக்கம்: சவுதியில் திரையிடப்பட்டது சினிமா!
சவுதியில் சினிமாவிற்கு தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு திரைப்படம் வெளியாகியது.
சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதில் ஒன்று சினிமா. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி உள்ளிட்ட விஷயங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதன்படி 40 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு முதல் திரையரங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை சவூதி இளவரசர் சல்மான் தொடங்கி வைத்தார். அரச குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பெண்கள் ஏராளமனோர் திரையரங்கில் குவிந்தனர். அந்த திரையரங்கில் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான பிளாக் பாந்தர் திரையிடப்பட்டது. அதனை உற்சாகத்துடன் மக்கள் கண்டுகளித்தனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.