சவுதியில் முதன்முறையாக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம்
சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறார். பதவிக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி உள்ளிட்டவற்றை அவர் செயல்படுத்தினார்.
இந்நிலையில் இவர் தலைமையிலான சவுதி அரசு, தற்போது அந்நாட்டு பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த 10 சவுதிப் பெண்கள் சவுதி அரேபிய உரிமத்தை பெற்றுக்கொண்டனர். சவுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக ஓட்டுநர் உரிமம் பெறும் பெண்கள் இவர்கள்தான். இதைத்தொடர்ந்து சவுதியில் உள்ள பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடைவிதிக்கும் சட்டம் வரும் 24ஆம் தேதியிலிருந்து அகற்றப்படவுள்ளது.

