செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை.. 14 ஆண்டுகள் கழித்து சொந்த நாடு திரும்பிய பிலிப்பைன்ஸ் பெண்!
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஜேன் வெலோஸோ. 39 வயதான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டுவேலை செய்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். அப்போது அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்த அவரது உறவினரின் ஆண் நண்பர்கள் கொடுத்த துணிகள் மற்றும் பைகளை அவர் பிலிப்பைன்ஸில் இருந்து எடுத்து வந்துள்ளார். அப்போது மேரிக்கு தெரியாமல் அதனுள் அவர்கள் ஹெராயினை மறைத்து வைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தோனேசியாவின் யோக்யாகர்டா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான மேரிக்கு 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கி படையினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தவேளையில், அவரை இந்தோனேசியாவுக்கு வேலைக்கு அழைத்த பெண் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்போது இந்தோனேசியாவின் அதிபராக இருந்த மூன்றாம் பெனிக்னோ அகுயினோவால் அவரது மரண தண்டனை, கடைசிநேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், மேரி அந்த ஆள்கடத்தல் வழக்கில் சாட்சியாகவும் சேர்க்கப்பட்டார். இதனால், மரண தண்டனை இல்லாத பிலிப்பைன்ஸ் நாட்டில் மேரிக்கான ஆதரவு அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது இருநாட்டு அரசுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேசியாவிலிருந்து மேரி தனது சொந்த நாடான பிலிப்பைஸிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (டிச.18) மேரி கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார். அந்த ஒப்பந்தத்தில் மேரி குற்றவாளியாகவே அவரது நாட்டிற்கு திரும்புவார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதினால், தற்போது அவர் மணிலாவிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்டு மார்கோஸ் அவருக்கு விடுதலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் வடக்கு நகரமான கபனாடுவானில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தவர் வெலோஸோ. அவருக்கு 17 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் பின்னர் அவர், தனது கணவரிடமிருந்து பிரிந்து சென்றார். அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக, அவர் 2009இல் துபாய்க்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரியச் சென்றார். ஆனால் அங்கு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அங்கிருந்து மீண்டும் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அந்த வேதனையில் இருந்தபோதுதான், அவரது உறவினர்கள் இந்தோனேசியாவுக்குப் பணிக்கு அனுப்பியுள்ளனர். அப்போதுதான் அவர் ஹெராயின் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கொண்டுவந்த பையில் 2.6kg (5.73lb) ஹெராயின் இருந்துள்ளது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.
விடுதலையானது குறித்து வெலோஸோ, “கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நான் என் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடமிருந்து பிரிந்து இருந்தேன். மேலும் என் குழந்தைகள் வளர்வதை என்னால் பார்க்க முடியவில்லை. சொந்த நாட்டில் எனது குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் என் பெற்றோருடன் நெருக்கமாக இருப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.