’ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டும்’ - மாணவிகளுக்கு ரூ.81,000 நிதியுதவி! ரஷ்யா அறிவிப்பின் பின்னணி?
உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொகையைப் பெறுபவர்கள் 25 வயதுக்குட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும் கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தப் பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 81,000) ஊக்கத்தொகை கிடைக்கும்.
இளம்பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், திடீர் காரணங்களால் குழந்தை இறந்துவிட்டாலோ அல்லது ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தாலோ அவர்களுக்கு இந்தத் தொகை கிடைக்குமா என்பது குறித்தும் அல்லது அவர்களிடமிருந்து அந்த தொகை திரும்பப் பெறப்படுமா என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அவர்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பின் ஆகும் செலவுகளுக்கு உதவியாக கூடுதல் நிதியுதவிகளைப் பெறுவார்களா என்பது பற்றியும் குறிப்பிடவில்லை.
மறுபுறம் ரஷ்ய தேசிய அரசாங்கம் தனது மகப்பேறு நிதியுதவியையும் அதிகரித்துள்ளது. 2025இல், முதல்முறையாக தாய்மார்களுக்கு 677,000 ரூபிள் (தோராயமாக $6,150) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 630,400 ரூபிள் தொகையிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். கூடுதலாக, இரண்டாவது குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்கு 894,000 ரூபிள் (சுமார் $8,130) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது 2024இல் 833,000 ரூபிள் ஆக இருந்தது. மேலும், ஊக்கத்தொகை மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் நிதியுதவி வழங்கி பிறப்பு விகிதத்தை உயர்த்த ரஷ்ய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இருப்பினும், ரஷ்யாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இது 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிறப்புகளைக் குறிக்கிறது. 2024 ஆம் ஆண்டில் 5,99,600 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட 16,000 மட்டுமே குறைவானது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த பிறப்பு விகிதம், முதியோர் இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. உக்ரைனில் நடந்த போரினால் நிலைமை மோசமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.