நாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்

நாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்

நாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்
Published on

அரசு முறை பயணமாக கம்போடியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், திராவிட கட்டடக் கலையின் களஞ்சியமாக திகழும் அங்கோர்வாட் கோயிலிக்கு சென்று வழிபட்டுள்ளார். 

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், வியட்நாம், கம்போடியா நாடுகளுக்கு 4 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். வியாட்நாமில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கம்போடியா சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஹூன் சென் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் இந்தியா- கம்போடியா இடையிலான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, நல்லுறவு உள்ளிட்ட இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதைத் தொடர்ந்து உலக பிரசித்திப் பெற்ற அங்கோர்வாட் கோயிலை, சுஷ்மா ஸ்வராஜ் சுற்றிப் பார்த்தார். அப்போது இந்திய பிரதிநிதிகளும், கம்போடிய அரசு பிரதிநிதிகளும் அவருடன் வந்தனர்.

உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. KHMER சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது.

அங்கோர்வாட் கோயிலின் வெளிச்சுவர் ஆயிரத்து 300 மீட்டர் நீளத்திலும், ஆயிரத்து 500 மீட்டர் அகலத்திலும் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்பக்கலை நிபுணர்கள்.

பிரம்மாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அங்கோர்வாட் கோயிலை UNESCO அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்தக் கோயில் 14ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் சிதிலமடைந்தது. ஆகவே அங்கு காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது. இதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும்.

1860ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுபிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவந்தன. அங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் எனப் பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com