குரங்கு, எலிக்கு வெற்றிகரமாக கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து !
சீனாவின் பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் குரங்கு மற்றும் எலிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வெற்றிகரமாக கொடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 45 ஆயிரம் பேர் கொரானா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. உலகச் சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 70 தடுப்பு மருந்துகள் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் மூன்று மருந்துகள் மனிதர்களிடம் ஏற்கெனவே செலுத்தப்பட்டு சோதனை பார்க்கப்பட்டுள்ளது. இப்போது இதில் அடுத்தக்கட்டமாக சீன மருத்துவ விஞ்ஞானிகள் முதல் முறையாக தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகளை குரங்கு மற்றும் எலிகளிடம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குரங்குகளின் உடம்பில் இந்தத் தடுப்பு மருந்தை 3 முதல் 6 மைக்ரோ கிராம் அளவிலான மருந்தை செலுத்தியதாகவும், அதன் பின்பு குரங்குகள் உடம்பில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவிலான எதிர்ப்பு சக்தி விகிதம் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இது முதல்கட்ட வெற்றி மட்டுமே மேலும் பல்வேறு சோதனைகள் முழுமையாக நடத்தப்பட்டால் மட்டுமே முழுவடிவம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.