இந்தியாவுக்கு எதிரான போர்.. பாகி. ராணுவத் தளபதியைத் தொடர்ந்து Ex அமைச்சரும் மிரட்டல்!
இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவின் அணு ஆயுதப் போர் குறித்து வெளிப்படையாக எச்சரித்திருந்தார். “சிந்து நதி நீர் வழித்தடங்களில் இந்தியா கட்டும் எந்தவொரு உள்கட்டமைப்பையும் பாகிஸ்தான் அழிக்கும். இந்தியா ஓர் அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம். அது அவ்வாறு செய்யும்போது, 10 ஏவுகணைகளைப் பயன்படுத்தி அதை அழிப்போம். எங்களுக்கு ஏவுகணைகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் ஓர் அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால், பாதி உலகத்தையும் எங்களுடன் வீழ்த்துவோம்” என அவர் கூறியதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அதேநேரத்தில், பாகிஸ்தான் தளபதியின் இந்த மிரட்டலுக்கு இந்தியா எதிர்வினை ஆற்றியிருக்கிறது. ஆசிம் முனிரின் உரை பாகிஸ்தான் நாட்டின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. அவர்களின் அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் பணியாது என்று கூறியிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தான் தளபதியின் இப்பேச்சு மூலம் பாகிஸ்தானின் சுயரூபத்தை பிற நாடுகள் எளிதில் புரிந்துகொள்ளும் எனக் கூறியுள்ளது. நட்புறவு உள்ள ஒரு மூன்றாவது நாட்டிலிருந்து பாகிஸ்தான் தளபதி இப்படி பேசியுள்ளது வருத்தம் தருவதாகவும் வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், அசிம் முனீரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவும் எச்சரித்துள்ளார். சிந்து மாகாண அரசாங்கத்தின் கலாசாரத் துறை ஏற்பாடு செய்த விழாவில் பேசிய பிலாவல் பூட்டோ, “நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் மோடிக்கும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். நீங்கள் (பாகிஸ்தானியர்கள்) ஆறு நதிகளையும் திரும்பப் பெறும் வகையில், போருக்கான வலிமை பெற்றவர்கள். இந்தியா இந்தப் பாதையில் தொடர்ந்தால், நமது தேசிய நலன்களைப் பாதுகாக்க, போரின் சாத்தியக்கூறு உட்பட அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் போரை தொடங்கவில்லை. ஆனால், நீங்கள் சிந்தூர் போன்ற தாக்குதலை நடத்த நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாண மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இது நீங்கள் நிச்சயமாக தோற்கப் போகும் போர்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும். ஆகையால், எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது இந்தியர்களின் ரத்தம் ஓடும்” என பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்திருந்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது, பாகிஸ்தான் நாட்டுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுதொடர்பாக விவாகரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, இதே விவகாரத்தை வைத்துத்தான் அசிம் முனீரும் கருத்து தெரிவித்திருந்தார்.