துருக்கியில் ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்துடனான எமோஜிக்களின் முகத்தைக் கொண்ட கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடுவை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய டெக் உலகின் மனித உணர்வுகளை எமோஜிக்களாக வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான உணர்வுகள், இடங்கள் மற்றும் செயல்கள் என பல்வேறு விஷயங்களையும் அடையாளப்படுத்த இன்று எமோஜிக்கள் வந்துவிட்டன. உலகின் முதல் அதிகாரப்பூர்வ எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். அன்று முதல் படிப்படியாக எமோஜிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
இந்த நிலையில், துருக்கியின் பழமையான நகரான கர்காமிஸில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய குடுவை ஒன்றை கண்டெடுத்தனர். அந்த குடுவையில் ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்துடனான எமோஜி இருந்தது. துருக்கி-சிரிய எல்லையில் உள்ள அந்த நகரில் இத்தாலியைச் சேர்ந்த பேராசிரியர் நிகோலோ மார்செட்டி தலைமையிலான குழுவினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மார்செட்டி, பானங்கள் அருந்தப் பயன்படுத்தப்படும் குடுவையில் சிரித்த முகத்துடன் கூடிய எமோஜி இருந்தது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலகின் பழமையான எமோஜியாக இது இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தெரிவித்தார். இந்தாண்டு தொடக்கத்தில் சிரிய வழக்கறிஞர் ஒருவர், உலகின் பழமையான எமோஜியைக் கண்டறிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த எமோஜி, சிரிய வழக்கறிஞர் குறிப்பிட்ட காலத்துக்கும் முந்தையதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த குடுவை தற்போது துருக்கியின் காஸியான்டாப் அகழாய்வு மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் ஆறு பில்லியன் எமோஜிக்கள் தினசரி பகிர்ந்துகொள்ளப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.