துபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர்...  மெட்ரோ ஸ்டேசன் மாஸ்டரான இளம்பெண்..!

துபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர்... மெட்ரோ ஸ்டேசன் மாஸ்டரான இளம்பெண்..!

துபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர்... மெட்ரோ ஸ்டேசன் மாஸ்டரான இளம்பெண்..!
Published on

துபாய் நகரத்தில் உள்ள புர்ஜ்மான் என்கிற மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலாளர் 25 வயதுடைய இளம்பெண் குலூட் அலி அல்காசிம்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று அரபு நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், காலிஜ் டைம்ஸ் இணையதளம் சிறப்புச் செய்தியை வெளியிட்டு அந்தப் பெண்ணை கெளரவப்படுத்தியுள்ளது. உலகின் பரபரப்பு மிக்க துபாய் நகரத்தை மக்களுடன் இணைத்துவைப்பதில் அவர் பேரார்வத்துடன் பணியாற்றி வருகிறார்.

"கடந்த 2018-ம் ஆண்டு துபாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி நிலைய மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். சில மாதங்களில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இன்று நான் மிகவும் பரபரப்பான மற்றும் பெரிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றில் மேலாளராக உயர்ந்துள்ளேன். உதவி ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்த்தபோது, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருந்தேன். என்னை நிரூபிக்கவும், அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும் எனவும் விரும்பினேன். தற்போது மதிப்பீட்டாளராகவும் பணிகளைத் தொடர்கிறேன்" என்று உற்சாகமாகப் பேசுகிறார் குலூட் அலி அல்காசிம்.

தன்னுடைய திறமையையும் பணியையும் அங்கீகரித்திருப்பதற்கும், தனக்கு வாய்ப்பை வழங்கியதற்கும் துபாய் மெட்ரோ ரயில் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறார் இந்த இளம் ஸ்டேசன் மாஸ்டர். பயணிகளுக்கும் மெட்ரோ ஊழியர்களுக்கும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிலையம் திறமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார் குலூட் அலி.

பெரும்பாலான நேரங்களில் பயணிகளை எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களைக் கையாள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது என ஓடியாடி வேலை செய்துவரும் அவர், துபாய் பெண்கள் கல்லூரியில் படிப்பைத் தொடர்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

"உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றவோ அல்லது உங்கள் இலட்சியங்களை அடைவதற்காக கடினமாக உழைக்கவோ பயப்பட வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நம்முடைய கனவுகளை அடைவதற்கு ஒரு நிலையான வழியில் பணியாற்றவேண்டும்" என்று அரபு அமீரகப் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார் குலூட் அலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com