தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுமா? பிரான்ஸின் புதிய பாதுகாப்பு மசோதா
தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 415 வாக்குகளும், எதிராக 127 வாக்குகளும் கிடைத்தன. 19 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அடுத்ததாக இம்மசோதா மேலவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நிறைவேறியதும், மீண்டும் கீழவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசர நிலை 6 முறை நீட்டிக்கப்பட்டது. அவசர நிலையின் போது, காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அத்தகைய நடவடிக்கைகளை நிரந்தரப்படுத்தும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எப்போது வேண்டுமானாலும், யாருடைய உடமையாக இருந்தாலும் சோதனை செய்யலாம். சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளவர்கள், தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும். எந்த வாகனத்தையும், எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். அதேபோல, மசூதி மற்றும் இதர வழிபாட்டுத் தளங்களில் அடிப்படைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பேசினால், உடனடியாக அந்த வழிபாட்டுத் தளங்களை மூடமுடியும். இதுபோன்ற நடவடிக்கைகளால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படலாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.