2வது முறையும் தோல்வி | விண்ணில் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ராக்கெட்!
அமெரிக்காவின் ட்ரம்பின் அரசில் DOGE துறையில் ஆலோசகராகச் செயல்பட்டு வரும் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்ணில் விண்கலன்களையும் ஏவி சோதனை செய்துவருகிறார்.
குறிப்பாக, செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் அடிப்படையில், இதுவரையில் நாசா உள்ளிட்ட நிறுவனங்களில்கூட இல்லாத சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் என்கிற ராக்கெட்டை உருவாக்கியது. இந்த ராக்கெட்டை வைத்து படிப்படியாக சோதனையை மேற்கொண்டுவருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். மறுபுறம், இவருடைய நிறுவன உதவியின் மூலமாக விண்ணில் நீண்டகாலமாகச் சிக்கித் தவிக்கும், அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விரைவில் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
இந்த நிலையில், இவருடைய நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் 8 விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறை இழந்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ராக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டது. ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “ராக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருள்களும் இல்லை. இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும். அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.
முன்னதாக, எலான் மஸ்க் நிறுவனத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி, ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அதுவும் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.