ஒபாமா மனைவியை பாலினரீதியாக விமர்சித்த எலான் மஸ்க்கின் தந்தை.. மகன் மீதும் குற்றச்சாட்டு!
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DODGE-இன் தலைவராக உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் அவரது மனைவி மிட்சல் ஒபாமா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒபாமா ஒரு தன் பால் ஈர்ப்பாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவரது மனைவி, ஒரு பெண்ணாக உடை அணியும் ஓர் ஆண்” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதுபோல் தனது மகன் எலான் மஸ்க்கையும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “எலான் மஸ்க் ஒரு நல்ல தந்தையாக இருக்கவில்லை. அவர், தனது குழந்தைகளின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். என்றாலும், எரோல் மஸ்க் எப்போது அபத்தமான, சர்ச்சை கருத்துகளைக் கூறுவதில் பெயர் எடுத்தவர் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக தன் தந்தை குறித்து கருத்து தெரிவித்திருந்த எலான் மஸ்க், “அவர் ஒரு தீயவர் என்றும் பயங்கரமான மனிதர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்க்கைப்போலவே எரோல் மஸ்க்கும் பல திருமணம் செய்துகொண்டவர் எனக் கூறப்படுகிறது. எலான் மஸ்க்கிற்கு மூன்று திருமணங்கள் நடைபெற்றது. இதன்மூலம் 11 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
முதல் 2 மனைவிகளை விட்டுப் பிரிந்து, 3வது மனைவியுடன் ஷிவோனுடன் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க்தான் தந்தை என்று கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், இதுகுறித்து எலான் மஸ்க் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.