'No Donation' ஆப்புவைத்த எலான் மஸ்க்; சிக்கலில் டொனால்டு ட்ரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு

’வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்கப் போவதில்லை’ என டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், பைடன், மஸ்க்
ட்ரம்ப், பைடன், மஸ்க்ட்விட்டர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் - ட்ரம்ப் மோதல்

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடன், ட்ரம்பை எதிர்த்து மீண்டும் நிற்கிறார். இந்த நிலையில், வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குச் சதவிகிதம் படைத்த நபரே, அந்நாட்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் தற்போது டொனால்டு ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவியது. எனினும், 15 மாகாணங்களில் நிக்கி ஹாலே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குடியரசு கட்சி சார்பில், தான் போட்டியிடப்போவதில்லை என்றும், போட்டியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களம் காண இருக்கிறார்.

யாருக்கும் நன்கொடை இல்லை - எலான் மஸ்க்

இந்த நிலையில், ’வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில் (ஜோ பைடன் மற்றும் டொனால்டு ட்ரம்ப்), எவருக்கும் தான் நிதியுதவி அளிக்கப் போவதில்லை’ என டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் திட்டவட்டமாகத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்தித்த பிறகு, இந்தப் பதிவை அவர் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இந்தப் பதிவுக்கு ட்ரம்பின் தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை. எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு, ட்ரம்பிற்குப் பின்னடைவாக மாறலாம் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்படலாம் எனக் கூறுகின்றனர்.

டொனால்டு ட்ரம்ப்க்கு சிக்கல் ஏன்?

ஏற்கெனவே பல வழக்குகளில் சிக்கியிருக்கும் டொனால்டு ட்ரம்புக்கு, நீதிமன்றங்கள் நிறைய இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், ட்ரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே ட்ரம்ப்பும் எலான் மஸ்க் சந்தித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்pt web

சமீபத்தில் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க், தற்போது 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். எலான் மஸ்க் 198 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன், அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதல் இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com