யானைச் சாணத்தில் இனிப்புத் தீனி.. சீனாவில் வைரலாகும் புதிய உணவகம்.. கட்டணம் ரூ.45,236 மட்டுமே!
சீனா என்றதும் உடனே நம் எல்லோரின் நினைவுக்கும் வருவதும் கொரோனா வைரஸ்தான். ஆனால், அதையும் தாண்டி அங்கு பலவித உணவுகளும் நடைமுறைகளும் வித்தியாசமானதாக இருக்கின்றன. அந்த வகையில், கிருமி நீக்கம் செய்யப்பட்ட, உலர்ந்த யானை சாணத்தால் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவை நிறைந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. இது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பேசுபொருளாகியும் உள்ளது.
சீனாவின் ஷாங்காயில் உள்ள ஓர் உணவகம், மழைக்காடுகளை மையமாகக் கொண்ட உணவுச் சுவைக்காக வைரலாகி வருகிறது. அதில், மர இலைகள் மற்றும் யானைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பு போன்ற அசாதாரண உணவுகள் அடங்கும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ( SCMP ) தெரிவித்துள்ளது. இந்த உயர்ரக உணவகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு வகைகளை வழங்குவதற்காக அறியப்படுகிறது. பானங்கள் தவிர, 15 வகையான மழைக்காடுகளை மையமாகக் கொண்ட உணவுக்கு 3,888 யுவான் (தோராயமாக ரூ.45,236) வசூலிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ”உணவருந்துபவர்கள் ஒரு தொட்டியில் வைக்கப்பட்ட செடியிலிருந்து ஓர் இலையைப் பறித்து, அதை சாஸில் நனைத்து, பச்சையாகச் சாப்பிடுகிறார்கள். பின்னர் ஒரு சர்வர் ’சுற்றுச்சூழல் இணைவு உணவு’ என்ற கருத்தை விருந்தினர்களுக்கு விளக்குகிறார். தொடர்ந்து, விருந்தினர்களுக்கு பல்வேறு வழக்கத்திற்கு மாறான உணவுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று ஐஸ்கட்டிகளிலிருந்து தேன் மற்றும் மகரந்தத்தைச் சுவைப்பதாகும். மற்றொன்று, ஒட்டுண்ணி, துர்நாற்றம் வீசும் ரஃப்லீசியா பூவின் கடுமையான வாசனையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வர் இது அழுகும் சதையின் வாசனையை ஒத்திருப்பதாக விவரிக்கிறார்.
அடுத்து, ‘யானை சாணத்தில் செருகப்பட்ட பூக்கள்’ என்ற தலைப்பில் ஓர் உணவு வழங்கப்படுகிறது. இது கிருமி நீக்கம் செய்யப்பட்ட, உலர்ந்த யானை சாணத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது மொறுமொறுப்பான துண்டுகளாக மாற்றப்பட்டு மூலிகை வாசனை திரவியம், பழ ஜாம், மகரந்தம் மற்றும் தேன் சர்பெட் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது” என விவரிக்கிறார். வைரலாகும் இந்த வீடியோவுக்கு பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
பயனர் ஒருவர், "இது முற்றிலும் அருவருப்பானது. நான் யுனானைச் சேர்ந்தவன். ஆனாலும், நாங்கள் இங்கு யானை சாணத்தை சாப்பிடுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், "பணக்காரர்கள் எதையும் சாப்பிடுவார்கள். ’மேஜிக் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஷாங்காய், உண்மையில் அதன் பெயருக்கு ஏற்ப செயல்படுகிறது. இது பணக்காரர்களுக்கு கீழ்ப்படிதல் மற்றும் அவமானத்திற்கான பொது சோதனைபோல் உணர்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபரோ, “இது ஒரு வழக்கமான உணவகம் அல்ல; இது ஒரு சோதனை கருத்து போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.