துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திருடர்கள்.. தங்கச் சங்கிலியைத் தராமல் காரணம் சொன்ன முதியவர்
தன் மனைவி பரிசாகக் கொடுத்த தங்கச் சங்கிலியை திருடர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதிலும், முதியவர் ஒருவர் கொடுக்காத விஷயம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
ஜெனீவாவில், கட்சிக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர். அப்போது அவரை வழிமறித்த திருடர்கள் இருவர், துப்பாக்கியைக் காட்டி அவரிடமிருந்த பர்ஸ் மற்றும் கை கடிகாரத்தைப் பறித்தனர். அத்துடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அது, ’தன் மனைவி தனக்குப் பரிசாகக் கொடுத்த செயின்’ என்று கூறி அதைக் கொடுக்க மறுத்துள்ளார்.
இதைக் கண்ட அந்த வழியாகச் சென்ற மற்றொரு நபர் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். உடனே திருடர்கள் அந்த நபர் பக்கம் துப்பாக்கியை திருப்பியதுடன், அவரிடமிருந்த பர்ஸ் மற்றும் கை கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் சத்தம் போட்டு அந்த நபரைக் காப்பாற்றியவர் உள்ளூர் கட்சித் தலைவராக இருப்பவர் எனவும், தப்பியோடிய அந்த திருடர்கள் உள்ளூர்க்காரர்கள் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.