பாலைவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! எல் நினோவால் நிகழ்ந்த இயற்கை அதிசயம்!
சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் எல் நினோவால் ஏற்பட்ட அசாதாரண கனமழை, உலகின் வறண்ட நிலப்பரப்பை வண்ணமயமான மலர்களால் நிரப்பியிருக்கிறது. பல ஆண்டுகளாக மண்ணுக்குள் உறங்கிக் கிடந்த விதைகள், கிழங்குகள் உயிர்ப்பெடுத்து முளைத்ததால், ஊதா, வெள்ளை, மஞ்சள் நிறப் பூக்கள் பரந்து விரிந்துள்ளன. வறட்சியின் அடையாளமாக இருந்த நிலம், இன்று உயிர்ப்பின் சின்னமாக மாறியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ஒரு மாற்றம் எப்போதும் அழிவை மட்டுமே கொண்டு வருவதில்லை... சில நேரங்களில் அழிவாகத் தோன்றும் ஒரு நிகழ்வே, புதிய உயிர்ப்புக்கான தொடக்கமாக மாறிவிடுகிறது.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்” என்கிறது சிலப்பதிகாரம்.
அதாவது, இயல்பாக பசுமையாகவும் வளமாகவும் இருக்கும் ஒரு நிலம், வறட்சியின் கொடுமையால் தனது இயல்பை இழந்து, பாலை நிலமாக மாறும் என்பதை இந்த வரிகள் எடுத்துரைக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பதிவு செய்த இந்த இயற்கை மாற்றத்தைப் போலவே, இன்று உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், அதற்கு நேர்மாறான ஒரு வியக்க வைக்கும் இயற்கை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதற்குக் காரணம்... எல் நினோவுடன் தொடர்புடைய அசாதாரண மழைப்பொழிவு!
உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ காலநிலை நிகழ்வுடன் தொடர்புடைய கனமழை, வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்திலும் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு கிடைக்கும் அட்டகாமா பாலைவனம், பூமியின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை காலநிலை மாற்றத்தால் பெய்த கனமழை, வறண்டு கிடந்த பாலைவன நிலத்துக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக மண்ணுக்குள் உறக்க நிலையில் இருந்த விதைகளும் கிழங்குகளும் மீண்டும் உயிர்பெற்று முளைக்கத் தொடங்கியுள்ளன.
அதன் விளைவு... வறண்டு கிடந்த பாலைவனமே தற்போது வண்ணமயமான மலர்களால் பூத்துக் குலுங்குகிறது! “பூக்கும் பாலைவனம்” என்று அழைக்கப்படும் இந்த அரிய இயற்கை நிகழ்வில், அட்டகாமாவின் பரந்த நிலப்பரப்புகளில் ஊதா, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்கள் விரிப்பைப் போல படர்ந்துள்ளன. வெடித்துப் போன வறண்ட மண்ணுக்கு நடுவிலும் மலர்கள் முளைத்திருப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த முறை சில பகுதிகளில் 180 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுபோன்ற அதிக அளவிலான மழை, அப்பகுதியில் நீண்ட காலமாகக் காணப்படாத ஒன்றாக இருந்ததாக சிலியின் தேசிய வனவியல் கழகமான CONAF-ன் அட்டகாமா பல்லுயிர்ப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதே கனமழை சிலி நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழை மலர்களுக்கு மட்டுமல்ல... அட்டகாமாவின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாவரங்கள் முளைத்துள்ளதால், பூச்சிகள், நத்தைகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளதாக CONAF தெரிவித்துள்ளது.
வறட்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட ஒரு நிலம்... இன்று உயிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது.
இயற்கையின் ஒரு நிகழ்வு, ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மறைந்திருந்த உயிர்களை வெளிக்கொண்டு வர முடியும் என்பதற்கு அட்டகாமாவின் இந்த “பூக்கும் பாலைவனம்” ஒரு வியக்க வைக்கும் உதாரணமாக மாறியுள்ளது.
