\
Eiffel Tower Closed After Female Staff Protest in Paris
ஈபிள் கோபுரம்Instagram/@bapsparis

இந்து அமைப்பினர் வருகை.. புறக்கணிக்கப்பட்ட பெண்கள்.. மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!!

பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது.? பார்க்கலாம்..
Published on

பிரான்ஸில் நடைபெற்ற ஒரு கோவில் திறப்பு விழாவிற்காக சென்ற, இந்து மத அமைப்பான போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)-ஐ சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரை பார்வையிட்டுள்ளனர். அப்போது, அந்தக் குழுவினர் பெண்களுடன் தொடர்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் ஈபிள் டவர் நிர்வாகத்திடம் ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சில பெண் ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து சிறிது நேரம் விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈபிள் டவர்
ஈபிள் டவர்Reuters

இந்தநிலையில் தான், இந்த சம்பவம் பெண் ஊழியர்களிடையே கடும் அதிருப்தியையும், அவமதிக்கப்பட்டதாக உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், ஈபிள் டவர் தற்காலிமாக மூடப்பட்டது. இதனிடையே, ஈபிள் டவரை நிர்வகிக்கும் SETE நிறுவனம், பெண்களுடனான தொடர்பை குறைக்க வேண்டும் என்ற இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், அது நிறுவனத்தின் மதிப்புகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான சமத்துவக் கொள்கைக்கும் எதிரானது என்றும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

Eiffel Tower Closed After Female Staff Protest in Paris
ட்ரெண்டு ஆன பிட்டு டாபி.. உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம்.. அதிரடியாக வந்த தரமான ஆஃபர்!

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகுவார் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அரசியல் தலைவர்களும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான சமத்துவம் எந்த சூழலிலும் சமரசம் செய்ய முடியாத கொள்கை எனக் கூறி, சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்ட ஈபிள் கோபுரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈபிள் டவர்
ஈபிள் டவர்Reuters

மறுபுறம் BAPS அமைப்பு, ஈபிள் டவர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்தே இந்த தனிப்பட்ட பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணம் திட்டமிடப்பட்டதாகவும், எவருக்கேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்குத் தங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட முந்தைய நாள் தான், பிரான்ஸின் முதலாவது பெரிய சுவாமிநாராயண் திருக்கோயில் பாரிஸில் பிரதமர் மோடியால் இணைய வழியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே இந்து அமைப்பினர் பிரான்ஸ் சென்றது குறிப்பிடத்தக்கது.

Eiffel Tower Closed After Female Staff Protest in Paris
“உயிர் போனாலும் பொறுப்பல்ல”.. டெல்லி கட்டட விபத்துக்கு முன்பே மாணவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com