கொரோனா எதிரொலி: சுற்றுலா சென்ற 17 தமிழர்கள் எகிப்து கப்பலில் சிக்கித்தவிப்பு
எகிப்தில் கப்பல் ஒன்றில் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அதில் உள்ள 17 தமிழர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை, பொள்ளாச்சி, சேலம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 17 பேர் எகிப்துக்கு சுற்றுலா சென்றனர். தலைநகர் கெய்ரோவை சுற்றி பார்த்துவிட்டு, லக்சர் நகருக்கு சென்ற அவர்கள் கப்பலில் தங்கினர். பல்வேறு நாடுகளில் இருந்த வந்த சுற்றுலாப் பயணிகளும் அவர்களுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த அமெரிக்கர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு கொரோனோ பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கப்பலில் இருப்பவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன் என்பவரும் கப்பலில் சிக்கியுள்ளார்.
அங்கு தங்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என அவர் தகவல் தெரிவித்துள்ளார். நோய் அறிகுறி இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று வனிதா ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.