நிபந்தனைகளை ஏற்காதவரை கத்தாருடன் சமரசம் இல்லை: எகிப்து திட்டவட்டம்
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாதவரை கத்தாருடன் சமரசத்திற்கே இடமில்லை என எகிப்து தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஃபெடரிகா மோக்ரெனி மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹசன் சவுக்ரே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கத்தார் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. அப்போது பேசிய எகிப்து அமைச்சர் ஹசன், பயங்கரவாதத்திற்கு எதிரான நிபந்தனைகளில் கத்தாருடன் சமரசப் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். உறவை மீண்டும் புதுப்பிக்க நிபந்தனைகள் முழுவதையும் கத்தார் அரசாங்கம் ஏற்க வேண்டும் என உறுதிபடத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் துண்டித்தன. உறவை மீண்டும் புதுப்பிக்க அல்ஜசீரா ஊடகத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கத்தாருக்கு, பிற அரபு நாடுகள் விதித்துள்ளன.

