ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: கையெழுத்திட்டார் ட்ரம்ப்
ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையொப்பமிட்டார்.
இதன் மூலம் அந்த மசோத சட்ட வடிவம் பெற்றுள்ளதை வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியன் கோன்வே உறுதிபடுத்தியுள்ளார். கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்குவாரா, மாட்டாரா என விவாதம் எழுந்த நிலையில் தற்போது அந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, ரஷ்யாவில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யும் முதலீட்டுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ’ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார். அவரை அமெரிக்க நாடாளுமன்றம் அவமதிக்கிறது என தெரிவித்தார்.
இந்தப் பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சரிந்துள்ளது.
முன்னதாக உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை இணைத்து கொண்டது உள்ளிட்ட சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் ரஷ்யா நடந்துகொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதாகவும் புகார் இருந்தது.