ஈரான் அதிபர் தேர்தலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக போராளி என புகழப்படும் இப்ராஹிம் ரைசி வெற்றிப் பெற்றுள்ளார்.
ஈரானின் தற்போதைய அதிபர் ஹாசன் ரோஹானி வரும் ஆகஸ்ட் மாதம் பதவி விலக உள்ள நிலையில், 60 வயதான இப்ராஹிம் ரைசி அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இம்முறை 48. 8 சதவிகித வாக்குகளே பதிவாகின. இதில், பெரும்பான்மையான வாக்குகள் பெற்று ரைசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஈரானின் புதிய அதிபராக ரைசி பதவியேற்கவுள்ளார். 20 வயது முதல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் ரைசி, பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். 2019 ஆம் ஆண்டு நீதித்துறையின் தலைவராகவும் இருந்தவர். ஈரானில் ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலராக தன்னை முன்னிறுத்தி, ரைசி இந்த தேர்தலை சந்தித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், அமெரிக்கா விதித்த தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுப்பதாகவும் அவர் அளித்த வாக்குறுதி, மக்களை வெகுவாக ஈர்த்தாக கூறப்படுகிறது.