கிரீஸ் நாட்டில் செவ்வாய் கிரகம் போன்ற சூழல் - சகாரா தூசி காரணமா? மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கிரீஸ் நாட்டை அச்சுறுத்திய சகாரா பாலைவனத்தின் தூசு மண்டலம்
சகாரா பாலைவனத்திலிருந்து எழுந்த தூசு மண்டலம் கீரீஸின் தலைநகர் அக்ரோபோலிஸ் ஆரஞ்சு படலத்தை உருவாக்கி இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகம் போன்று பகல் நேரத்தில் அந்தப்பிரதேசம் முழுக்க செம்மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கிறது. அந்நாட்டில் காற்றின் தன்மை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், மக்கள் சுவாச கோளாறு போன்ற உபாதைகளுக்கு ஆளாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் கீரீஸ் நாட்டின் சில பகுதிகளில் தினசரி அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இது வடக்கு கிரீஸ் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அப்பகுதியில் பருவமழை இல்லாததால் காட்டுத்தீ பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
2018 பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான சூழல் என கூறப்படும் நிலையில், இதுபோன்ற நேரத்தில் மக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசத்தை அணிந்துக்கொள்வது அவசியம் என்றும், தூசு படலம் குறையும் வரை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு வருடத்தில் மட்டும் சஹாரா பாலைவனத்தில் இருந்து 60 முதல் 200 மில்லியன் டன்கள் வரையிலான தாது, மாசு துகள்கள் வெளிவருகிறது. இவற்றில் பெரும்பகுதி நிலத்தில் படிந்தாலும், சில பகுதிகள் நீண்டதூரம் காற்றில் பயணித்து ஐரோப்பாவை எட்டிவருகின்றன.