31 மில்லியன் பவுண்டுகளுடன் துபாய் இளவரசி தலைமறைவு!
துபாய் மன்னரின் ஆறாவது மனைவி ஹயா, 31 மில்லியன் பவுண்டுடன் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோமின் ஆறாவது மனைவி இளவரசி, ஹயா பின்ட் அல் ஹூசைன். ஜோர்டான் மன்னரின் சகோதரியான இவருக்கு ஜலிலா (11), சையத் (7) ஆகிய இரண்டு குழந்தைகள். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரியுள்ளார். இது தொடர்பான பிரச்னையில் அவர் கடந்த மே மாதம் தலைமறைவானார். அவர் ஜெர்மன் நாட்டில் தஞ்சம் கோரினார் என்றும் ஆனால் அந்நாடு அவருக்கு அடைக்கலம் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தனது குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாகவும் அவர் தப்பிக்க ஜெர்மன் அதிகாரிகள் சிலர் உதவியதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளன.
தனது மனைவியை துபாய்க்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி, மன்னர் விடுத்த கோரிக்கையை ஜெர்மன் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் மன்னரின் மகள் இளவரசி லதிஃபா, ஏற்கனவே அந்நாட்டில் இருந்து தப்பி அமெரிக்க செல்ல இருந்த நிலையில், இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துபாய்க்கே திரும்ப அனுப்பப்பட்டார். இந்நிலையில் ஹயாவும் தப்பிச் சென்றிருப் பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.