“யாரப்பா தேடுறீங்க?” - ஊரோடு சேர்ந்து தன்னைத்தானே தேடிய மதுபோதை ஆசாமி!

“யாரப்பா தேடுறீங்க?” - ஊரோடு சேர்ந்து தன்னைத்தானே தேடிய மதுபோதை ஆசாமி!
“யாரப்பா தேடுறீங்க?” - ஊரோடு சேர்ந்து தன்னைத்தானே தேடிய மதுபோதை ஆசாமி!

துருக்கியை சேர்ந்த நபரொருவர், மது அருந்திவிட்டு தன்னை தானே நண்பர்களுடன் இணைந்து தேடிய நூதன சம்பவம் நடந்திருக்கிறது.

50 வயதாகும் துருக்கியை சேர்ந்த பாய்ஹன் முட்லு என்பவர், தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியிருக்கிறார். பின் அங்கிருந்து கலைந்து, அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். பாய்ஹன் முட்லு மட்டும் வீட்டுக்கு நேரடியாக செல்லாமல், அங்கிருந்த பகுதியில் தனியாக உலவிக் கொண்டிருந்திருக்கிறார். வீட்டுக்கு வரவில்லை என அவர் குடும்பத்தினர் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். உடனடியாக அவர்கள் தாங்கள் மது அருந்திய ஊர் முழுவதும் தேடுதல் பணியை முடுக்கியுள்ளனர்.

ஊர் முழுவதும் தங்கள் நண்பனொருவனை காணவில்லை என அக்குழு தெரிவித்த நிலையில், மக்கள் அனைவரும் இணைந்து தேடுதல் பணிக்கு உதவ முன்வந்துள்ளனர். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த பாய்ஹன் முட்லுவும் வந்திருக்கிறார். தன்னைதான் குறிப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், ‘யாரையோ தேடுகிறார்கள்... நாமும் உதவுவோம்’ என இருந்திருக்கிறார் மனிதர். இதுதெரியாத அப்பகுதி மக்கள், அவருடனே இணைந்து அவரை பல மணி நேரம் தேடிக்கொண்டு இருந்துள்ளனர். இப்படியாக ஒரு கிராமமே தேடுதலில் ஈடுபட்டிருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் சோர்வடைந்த அனைவரும், அவரின் பெயரை சொல்லி கத்தியுள்ளனர். சத்தம் கேட்டு அவர் வந்துவிடுவார் என நினைத்து கிராமமே கத்தியபோதுதான், அங்கிருந்த பாய்ஹன் முட்லுவுக்கு விழிப்பே வந்திருக்கிறது.

எல்லோரும் தன் பெயரை முழக்கமிடுவதை கண்ட அவர், அப்பாவியாக வந்து “நாமெல்லாம் யாரைத் தேடுகிறோம்? நான் இங்கேதான் இருக்கிறேன்” எனக்கூட்டத்துக்குள் இருந்து குரல் கொடுத்திருக்கிறார். இதைக்கண்ட மக்கள் அனைவரும், சில நிமிடங்கள் அதிர்ச்சியடைந்து பின்னர் நடந்ததை புரிந்துக்கொண்டு சிரித்தபடி அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com