அண்டார்டிகா பனிப்பாறைகளிலிருந்து குடிநீர்: ஐக்கிய அரபு நாடுகளின் பிரம்மாண்ட திட்டம்
அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை இழுத்து வந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் தொடங்க அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரசு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய மழையின்றி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக அரபு நாடுகளின் கிழக்குக் கடற்கரையில் உள்ள புஜைரா துறைமுகத்தில் சிறப்பு ஆலை நிறுவப்படுகிறது. அதாவது, அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ. இழுத்துக் கொண்டு வந்து பின்னர் அதை குடிநீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு சராசரியான பனிப்பாறையில் சுமார் 20 லட்சம் லிட்டர் (அதாவது 2 பில்லியன் கேலன்) தண்ணீர் இருக்கும். கடல் வழியாக பனிப்பாறைகளை இழுத்து வரவுள்ளதால், 80 சதவீத பனிப்பாறை கடலுக்கடியில் மூழ்கி இருக்கும். இதனால் பனிபாறை உருகி ஆவியாவது குறைக்கப்படும். மேலும் பனிப்பாறைகளால் வறண்ட பகுதிகளில் மழை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட உள்ளதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.