\
Thwaites Glacier
Thwaites GlacierAI

உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?? Doomsday பனிப்பாறை குறித்து வெளியான புதிய தகவல்!

த்வைட்ஸ் (Thwaites) பனிப்பாறை உருகினால் கடலோர நகரங்கள், தீவுகள் மற்றும் தாழ்வான பகுதிகள் எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படலாம். அதனால்தான் இதற்கு ‘Doomsday Glacier’ என்று பெயர் வந்தது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அண்டார்டிகாவில் உள்ள த்வைட்ஸ் (Thwaites) பனிப்பாறை, ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட வேகமாக உருகி வருவதாகப் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ என்று அழைக்கப்படும் இந்த பனிப்பாறை, எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த , இர்வின் மற்றும் நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் ( NASA’s Jet Propulsion Laboratory) சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பனிப்பாறையின் அடிப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஒரு புதிய கணினி மாதிரியை உருவாக்கினர்.

Thwaites Glacier
Thwaites Glacier AI

இதன் அடிப்படையில், 2100-ம் ஆண்டுக்குள் த்வைட்ஸ் (Thwaites) பனிப்பாறை உருகுவதால் மட்டும் உலகளாவிய கடல் மட்டம் சுமார் 1.2 inch கள் உயரக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. இது முந்தைய கணிப்புகளைவிட இருமடங்காகும். இந்த ஆய்வு ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்தப் பனிப்பாறை, புளோரிடா மாகாணத்தின் அளவுக்கு பெரியது. இதன் உருகும் நீர், தற்போது உலகளாவிய கடல் மட்ட உயர்வில் சுமார் 4 சதவீதப் பங்களிப்பைச் செய்கிறது.

பனிப்பாறையின் அடிப்பகுதியில் கடல்நீர் புகுந்து வெளியேறும் பகுதிகள், முன்பு கருதப்பட்டதைவிடப் பெரிய பரப்பில் அமைந்துள்ளன. அலைகளின் ஏற்ற இறக்கத்தால் வெப்பமான கடல்நீர் பனிப்பாறையின் அடிப்பகுதிக்குள் புகுந்து, பனியை வேகமாக உருக்குகிறது.

Thwaites Glacier
Thwaites Glacier Reuters

மேலும், பனிப்பாறையைத் தாங்கி நிற்கும் கடலடிப் பாறை மேடுகளில் இருந்து பனி விலகி வருவதாகவும் ஆய்வு கூறுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், ஒரு முக்கியமான பாறை மேட்டிலிருந்து விலகுவதற்கு 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Thwaites பனிப்பாறை முழுமையாகச் சரிந்தால், கடல் மட்டம் இரண்டு அடிக்கும் மேல் உயரக்கூடும். மேலும், இது அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பரப்பைத் தடுத்து நிறுத்தும் தடுப்பாகச் செயல்படுவதால், அதன் சரிவு நீண்டகாலத்தில் சுமார் 10 அடி கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கலாம்.

இதனால் மியாமி முதல் மணிலா வரையிலான கடலோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும். பனிப்பாறையின் அடிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை நேரடியாக ஆய்வு செய்ய, விஞ்ஞானிகள் 2028-ம் ஆண்டு அங்கு கருவிகளை நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.

Thwaites  Glacier
Thwaites GlacierReuters

பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைத்து, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாகும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது அவசியம் என்றும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வைத் தவிர்ப்பது கடினம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Thwaites Glacier
இந்தியப் பெருங்கடலில் உருவான வானிலை மாற்றம்.. பாதிப்பா.. நல்லதா? Positive IOD என்றால் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com