\
Ocean
Ocean Reuters

சுனாமி, நிலநடுக்கம் வருமா? கரை ஒதுங்கிய கொடூர மீன்? புலம்பித் தள்ளும் பொதுமக்கள்!

டூம்ஸ்டே (ஓர்பிஷ்) மீன் கரை ஒதுங்கியிருப்பதால் மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் நடக்க இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் இபு, மவுண்ட் செமேரு, அனக் கிரகடாவ், லெவோடோபி லாகி-லாகி, இலி லெவோடோலோக், சினாபுங் ஆகிய 6 எரிமலைகள், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் வெடித்துச் சிதறின. குறிப்பாக, மவுண்ட் சினாபுங் எரிமலை வெடித்தபோது, சுமார் 3,500 மீட்டர் உயரம் வரை, சாம்பல் துகள் மேலே எழும்பியதாகவும் சொல்லப்பட்டது.

Disaster
DisasterReuters

இதனால், விமானச் சேவையும் பாதிக்கப்பட்டு, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்தனர். சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல் போன்ற பகுதிகளுக்கான வெளிநாட்டு விமானச் சேவையும், பாலி, சுராபாயா போன்ற நகரங்களுக்கான உள்நாட்டு விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதன் தாக்கம் குறையாமல் இருந்த நிலையில், செப்டம்பர் 4-ஆம் தேதி அன்று, அனக் கிரகடாவ் எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியதால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர். இவ்வாறு இந்தோனேசியா இயற்கை கோர கரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நாட்டில் புதிய தகவல் ஒன்று வெளியாகி, வைரலாகப் பரவி வருகிறது. இதனால், மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது, இந்தோனேசியாவின் கொமோடோ பகுதியில் உள்ள பிங்க் கடற்கரையில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அன்று, 13 அடி நீளம் கொண்ட, பிரம்மாண்டமான ஓர்பிஷ் என்ற வகை மீன் இறந்து கரை ஒதுங்கியிருந்தது.

oarfish
oarfishGoogle Gemeni

கடலின் ஆழத்தில் வாழக்கூடிய இந்த மீன்கள், அரிதாகவே கரை ஒதுங்குவதாகவும், ’கடவுளின் தூதர்கள்’ என்று அழைக்கப்படும் இந்த மீன்கள் கரை ஒதுங்கினால், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் என்றும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த மீன் கரை ஒதுங்கியபோது ஆபத்து ஏற்படும் என மக்கள் பயத்தில் இருந்த சமயத்தில், சரியாக 6 நாட்களுக்குப் பிறகு, பெரிய எரிமலை வெடிப்புச் சம்பவம் நடந்தது. எதார்ச்சையாக நடந்த இந்தச் சம்பவத்தை, அந்த மீனோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ள மக்கள், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இன்னும் வேறு ஏதாவது இயற்கைப் பேரிடர் வருமா என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால், அறிவியல் ஆதாரங்களின்படி, மீன் தோன்றுவதற்கும் இயற்கை இடர்பாடுகளுக்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com