
கடந்த 1993ஆம் ஆண்டு சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில், 3 நபர்கள் இணைந்து ஓர் இளைஞரை குத்திக் கொல்கின்றனர். இந்த சம்பவத்தில் அப்போதே இருவர் பிடிபடுகின்றனர். மற்றொருவர் தலைமறைவாகிறார். அவரது பெயர் ஜோவ் என தெரிய வருகிறது. இவரை, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், அவர் சீனாவின் தெற்கு நகரமான குவாங்சோவில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. கடந்த மாத இறுதிவரை அப்பகுதியில் இருந்த சோ, சமீபத்தில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாருடன் புறப்படுவதற்கு முன்னர் தன் மனைவியிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தன் மனைவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறார். பின்னர் தன் அண்ணியிடம், "விவாகரத்து ஒப்பந்தம் முடிந்துவிட்டது; அதில் உங்கள் சகோதரியை கையெழுத்திடச் சொல்லுங்கள். நீங்கள் அவரை, மறுமணம் செய்ய வற்புறுத்த வேண்டும். இனி, எனக்காக அவர் காத்திருக்க வேண்டாம். நான் சிறையிலிருந்து திரும்ப வரமாட்டேன்" என்று கூறுகிறார்.
அதற்கு அவரது மனைவி அழுதபடியே, "உனக்கு நான் வேண்டாமா? இதற்கு, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்கிறார். அதற்கு கணவர் ஜோவ் மீண்டும், ”எனக்காகக் காத்திருக்காதே" என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அதற்கு, அவரது மனைவி தன் கணவரின் வாயை மேலும் சொல்லாதபடி தடுக்கிறார். இந்த வீடியோதான் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பைப் பார்த்து இணையதளவாசிகள் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
பின்னர், 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த குற்றத்திற்காக வருந்தும் ஜோவ், “இத்தனை ஆண்டுகளாக நான் என் பெற்றோரைப் பார்க்கவில்லை. அவர்களிடம் என் குழந்தைகளைக் காட்டவில்லை. நான் சிறுவயதில் தவறு செய்தேன். நான் அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோதான் உலகத்தைக் கலக்கி வருகிறது.